தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒருபோதும் விலக மாட்டோம் - வைகோ
|திராவிட இயக்கத்தை வலுப்படுத்த அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை மண்டல ம.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
திராவிட இயக்கத்தை அழிக்கும் நோக்கத்தில் ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது. பேராபத்து நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசு மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சிகளை அழிக்க துடிக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சியில் அல்லாத மாநிலங்களில் காலூன்ற வேண்டும் என்ற வெறியோடு அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் அது ஒருபோதும் நடக்காது. தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது.
திராவிட இயக்கத்தை வலுப்படுத்த அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒருபோதும் விலக மாட்டோம். வருகிற சட்டமன்ற தேர்தல் திராவிட இயக்கத்தின் வரலாற்றை தீர்மானிக்க போகிற தேர்தல். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.