மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம்: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்
|மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி,
தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பகுதிகளை ஆய்வு செய்த பிறகு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்டாவின் உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசாக திமுக அரசு தொடர்ந்து செயல்படும். அதேபோல், காவிரி டெல்டாவின் வேளாண் வளர்ச்சிக்கும், இந்தப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரவும் முன்னுரிமை அளித்து இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில், காவிரியில் உள்ள பாசன கால்வாய்களைத் தூர்வாரும் பொருட்டு கடந்த 2021-22ம் ஆண்டில், 62 கோடியே 91 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3,859 கி.மீ தூரமுள்ள கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
மேட்டூர் அணை பாசனததுக்காக திறந்துவிடப்படக்கூடிய நாளான ஜூன் 12ம் தேதியன்று அணை திறக்கப்பட்டது. அதோடு வேளாண் பெருமக்களுக்கான பல்வேறு உதவிகள் எல்லாம் வழங்கப்பட்டது. இதன்விளைவாக காவிரி டெல்டா பகுதியில் வரலாற்று சிறப்பான சாதனையை நாம் எட்டினோம். 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியும், 13 லட்சத்து 341 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு, 39 லட்சத்து 73 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப்பெரிய சாதனை படைக்கப்பட்டது.
விவசாயிகளின் உரிமைகளை விட்டுக் கொடுக்காத அரசாக திமுக அரசு செயல்படும். விவசாயிகளுக்கு அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்றன. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம். வீட்டு மின் இணைப்பு கட்டணத்தில் எந்த உயர்வும் இல்லை. பல்கலைக்கழக வேந்தராக முதல் அமைச்சர்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்றார்.