< Back
மாநில செய்திகள்
தாமிரபரணி ஆற்றில் நேரில் ஆய்வு செய்வோம் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள்
மாநில செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் நேரில் ஆய்வு செய்வோம் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள்

தினத்தந்தி
|
1 Oct 2024 3:37 AM IST

தாமிரபரணி ஆற்றில் தேவைப்படும்பட்சத்தில் நாங்களே நேரில் வந்து ஆய்வு செய்வோம் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு, மதுரை ஐகோர்ட்டில் 2018-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில், நெல்லை தாமிரபரணி ஆற்றில் பழமையான படித்துறைகள், மண்டபங்கள் சிதிலமடைந்து வருகின்றன. இவற்றை பழமை மாறாமல் சீரமைத்து பராமரிக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாரித்த ஐகோர்ட்டு, தாமிரபரணி ஆற்றில் ஒரு சொட்டு கழிவு நீர் கலப்பதை கூட அனுமதிக்க மாட்டோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தனர். அதிகாரிகளின் வீடுகளில் இதுபோல கழிவுநீர் சென்றால் பார்த்துக்கொண்டு இருப்பார்களா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை மாநகராட்சி கமிஷனர் சார்பில், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் நேரடியாக கலப்பதை தடுக்கும் வகையில் ஆங்காங்கே சுத்திகரிப்பு உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. ஆற்றில் கலக்கும் கழிவுநீரை முற்றிலும் தடுக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரப்பட்டது.

இதற்கு மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அழகுமணி ஆஜராகி, நெல்லை மாநகராட்சியின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார். தொடர்ந்து இரு தரப்பு வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீர் முழுவதும் தடுக்கப்பட வேண்டும். இதனை முன்மாதிரியாக கொண்டு, மற்ற ஆறுகளில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும். தாமிரபரணி ஆறு தொடக்கம் முதல் கடலில் கலக்கும் பகுதி வரை அதன் இருபுறமும் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள், இந்த ஆற்றில் கலக்கும் கழிவு நீரை அவரவர் பகுதிகளில் தடுப்பதற்கான திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவுவதற்காக வக்கீல் அருள் நியமிக்கப்படுகிறார். மேலும் நெல்லை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை தாமாக முன்வந்து இந்த வழக்கில் சேர்க்கிறோம். தேவைப்படும்பட்சத்தில் நாங்களே நேரில் வந்து தாமிரபரணி ஆற்றினை ஆய்வு செய்வோம் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்