"அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள்... ஆவணங்கள் இருந்தால் பதில் கூறுகிறேன்" - அமைச்சர் செந்தில் பாலாஜி
|அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு அவரிடம் ஆவணங்கள் இருந்தால், பதில் கூற தயாராக இருக்கிறோம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக மின்வாரியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பின் போது, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது;-
"ஒரு அரசியல் கட்சி அமலாக்கத்துறையை எப்படி பயன்படுத்துகிறது என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசுவதிலேயே தெரிகிறது. நிலக்கரி கொள்முதல் தொடர்பான அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் எதுவும் ஏற்புடையது அல்ல.
மத்திய அரசு எத்தனை டாலருக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது, அதே சமயம் தமிழக அரசு எத்தனை டாலருக்கு நிலக்கரி இறக்குமதி செய்கிறது, இரண்டுக்கும் ஏன் இந்த வித்தியாசம் என்பதை தெரிவிக்க வேண்டும்.
பா.ஜ.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு அவரிடம் ஆவணம் இருந்தால் கொடுக்க வேண்டும். அதற்கு பதில் கூற தயாராக இருக்கிறோம்."
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.