விருதுநகர்
அடுத்த ஆண்டு முதலிடத்துக்கு முன்னேற்றுவோம்
|அடுத்த ஆண்டு முதலிடத்துக்கு முன்னேற்றுவோம் 3-ம் இடம் போதுமானதல்ல என ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் தொடா்ந்து 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.
முன்னோடி மாவட்டம்
நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்று சாதனை படைத்தது. ஆதலால் 10-ம் வகுப்பு தேர்விலும் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் மாணவர்களும், கல்வியாளர்களும் காத்திருந்தனர். இந்தநிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்தது.
கல்வியில் முன்னோடி மாவட்டமாக விளங்கும் விருதுநகரை வருகின்ற தேர்வில் முதலிடத்திற்கு கொண்டு வருவோம் என கல்வியாளர்கள் சூளுரைத்தனர்.
இதுகுறித்து கல்வியாளர்கள், மாணவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
முதலிடம் உறுதி
விருதுநகர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி:-
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி சதவீதம் சற்று குறைந்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கடந்த கொரோனா பாதிப்பு காலத்தில் 8-ம்வகுப்பு மற்றும் 9-ம்வகுப்பு படித்த நிலையில் அவர்களது கற்றல் பயிற்சியில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆதலால் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.
வருகிற கல்வியாண்டில் விருதுநகர் மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்விலும் முதலிடம் பெற அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட பள்ளி கல்வித்துறை வழிகாட்டலில் மேற்கொள்ளப்படும். தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் இதற்காக தங்களை அர்ப்பணிக்க தயாராக உள்ளனர், எனவே வருகின்ற பொதுத்தேர்வில் முதலிடம் பெறுவது உறுதி.
தொடர்சாதனை
தலைமையாசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ்:-
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 3-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
அனைவரின் ஒத்துழைப்புடன் வருகின்ற காலங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதலிடத்தை பெற மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகிறோம். கண்டிப்பாக தொடர்ந்து சாதனை படைப்போம்.
நம்பிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாணவி ராகவ வர்ஷினி:-
விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 10-ம் வகுப்பு தேர்வில் 3-வது இடத்தை பிடித்து உள்ளது. ஆசிரியர்கள், அதிகாரிகள், பெற்றோர், மாணவ-மாணவிகளின் ஒத்துழைப்பால் இது சாத்தியமானது. பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பிடித்த இந்த மாவட்டம் 10-ம் வகுப்பு தேர்வில் 3-வது இடம் பிடித்துள்ளது. வரும் காலங்களில் முதல் இடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
முதலிடத்தை தக்க வைப்போம்
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தது. ஆதலால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதலிடம் பெறுவோம் என நம்பிக்கையுடன் காத்து இருந்தோம். ஆனால் 3-வது இடம் பெற்றுள்ளது. இருப்பினும் வருகின்ற காலங்களில் முதலிடத்தை தக்க வைக்க மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். கண்டிப்பாக அடுத்த ஆண்டு அனைத்து பொதுத்தேர்விலும் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெறும்.
கொரோனா காலம்
தொம்பகுளத்தை சேர்ந்த மாணவன் கோகுலகிருஷ்ணன்:-
கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் பாடங்கள் பயின்றதால் பொதுத்தேர்வு எழுத சற்று சிரமப்பட்டோம். இருப்பினும் அனைவரின் விடாமுயற்சியினால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் தொடர்ந்து 3-வது இடத்தை தக்க வைத்துக்கொண்டோம். ஆசிரியர்களின் பயிற்சி, மாணவர்களின் விடாமுயற்சி ஆகியவை தான் இந்த வெற்றிக்கு காரணம்.
விடாமுயற்சி
தாயில்பட்டி கோட்டையூரை ேசர்ந்த மாணவி ராஜ செல்வி:-
முதன் முதலில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதுவதால் சற்று பயம் இருந்தது. இருப்பினும் ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தினால் தேர்வு எழுதினோம். தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து 3-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்வில் கண்டிப்பாக மாணவர்கள் விடாமுயற்சியுடன் படித்து முதலிடத்திற்கு வந்து விடுவர்.
லட்சியம்
ராஜபாளையத்தை சேர்ந்த மாணவி காயத்ரி பிரபா:-
மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 3-வது இடத்தை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் வரும் காலங்களில் தொடர்ந்து முதலிடத்தை பிடிக்க மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் என அனைவரும் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக தான் மாணவர்கள் இ்ந்த சாதனையை நிகழ்த்தினர்.
இந்த சாதனையை தொடர்ந்து மாணவர்கள் தக்க வைத்தக்கொள்வர். அடுத்த ஆண்டு நடைபெறும் பிளஸ்-1 தேர்விலும் மாநில அளவில் விருதுநகரை முதலிடத்திற்கு கொண்டு வருவது தான் எங்களது லட்சியம்.
அச்ச உணர்வு
சிவகாசியை சேர்ந்த மாணவன் ரூபன்ஸ்ரீவிஜய்:-
10-ம் வகுப்பு தேர்வில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பெற்றுள்ளது. அடுத்து வரும் காலங்களில் முதல் இடத்துக்கு முன்னேறும். நான் முதன் முறையாக தற்போது தான் பொது தேர்வு எழுதினேன். மிகுந்த அச்ச உணர்வுடன் எழுதினேன். எதிர்பார்த்த மதிப்பெண்களை விட குறைவாக தான் கிடைத்து இருக்கிறது. அடுத்து வரும் பொது தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்கள் பெற முயற்சி செய்வேன். 11-ம் வகுப்பில் கம்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதிகாலை 4 மணிக்கு எழுந்து படித்ததால் பள்ளி அளவில் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிறப்பு தேர்வு
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமர்:-
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 3-வது இடத்தை பெற்றுள்ளது. அனைத்து பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அடிக்கடி கலந்தாய்வு கூட்டம் நடத்தி நடப்பு கல்வியாண்டில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு நடைபெறும் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதிலும் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளை அதிக கவனம் செலுத்தி அப்பள்ளிகளில் சிறப்பு தேர்வுகள் நடத்தி தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு தேவையான பயிற்சியளிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதேபோன்று பிளஸ்-1 தேர்ச்சி சதவீதத்தில் கடந்த ஆண்டை விட 0.35 சதவீதம் குறைந்தநிலையில் 6-வது இடம் பெற்றுள்ளது. எனவே அதிலும் சிறப்பு கவனம் செலுத்தி நடப்பு கல்வி ஆண்டில் முதலிடம் பெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்
பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம்
விருதுநகர் மாவட்டத்தில் 181 அரசு பள்ளிகளில் 9,036 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய நிலையில், 8,415 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.13 ஆகும்.
தேர்ச்சி சதவீத விவரம் வருமாறு:- மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் 87 மாணவ மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய நிலையில் 85 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 97.7 ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9,036 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 8,415 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.13 ஆகும். நகராட்சி பள்ளிகளில் 201 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 193 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.02 ஆகும். பகுதியாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4,781 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 4,659 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 97.45 ஆகும். மெட்ரிக் பள்ளிகளில் 3,269 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 3,245 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 99.77 ஆகும். மாநில பாடத்திட்டத்திலான சுயநிதி பள்ளிகளில் 262 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 256 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 98.47 ஆகும்.