< Back
மாநில செய்திகள்
எண்ணூர் ஈரநிலங்களை மீட்டுருவாக்கம் செய்து பாதுகாக்குமாறு பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம் - சீமான்
மாநில செய்திகள்

எண்ணூர் ஈரநிலங்களை மீட்டுருவாக்கம் செய்து பாதுகாக்குமாறு பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம் - சீமான்

தினத்தந்தி
|
8 July 2022 12:08 AM IST

எண்ணூர் பகுதியின் ஈரநிலங்களை மீட்டுருவாக்கம் செய்து பாதுகாக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

வடசென்னை, எண்ணூர் பகுதியின் ஈரநிலங்களை மீட்டுருவாக்கம் செய்துப் பாதுகாக்கும் வண்ணம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பினை நாம் தமிழர் கட்சி வரவேற்கிறது என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"வடசென்னை, எண்ணூர் பகுதியின் ஈரநிலங்களை மீட்டுருவாக்கம் செய்துப் பாதுகாக்கும் வண்ணம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பினை நாம் தமிழர் கட்சி வரவேற்கிறது.

சாம்பல் படிந்த சதுப்பு நிலங்களை சரி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வானது, "பயன்படுத்தப்படாத" எண்ணூர் ஈரநிலங்களை அரசாங்கத்தின் சதுப்பு நிலத் திட்டத்தின் கீழ் அறிவிக்கவும், அதனை மீட்டெடுப்பதற்கானத் திட்டத்தை உருவாக்கவும், மேலும் முறைகேடுகளிலிருந்து பாதுகாக்கவும் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

மேலும், எண்ணூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எதிரான, பொதுமக்கள் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க காலாண்டுக்கு ஒருமுறை கூடும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலானக் குழுவினை அமைக்குமாறும், மின் கழகத்தின் உரிமம் பெறாத செயல்பாடு மற்றும் மாசுபாட்டிற்காக நடவடிக்கை எடுக்குமாறும், அதற்கு வழக்குத் தொடரவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதினை வரவேற்கிறேன்.

இவ்வழக்கில் ஈடுபட்ட அனைவருக்கும், இதற்காக தொடர்ந்து களத்தில் செயல்பட்ட நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, இவ்வழக்கின் தீர்ப்பினை எந்தவித சமரசமுமின்றி செயல்படுத்துமாறு தமிழ்நாடு அரசினையும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்