ராமநாதபுரம்
தமிழக மக்களின் உணர்வை மதித்து செயல்பட வேண்டும்-நவாஸ்கனி எம்.பி. அறிக்கை
|கவர்னர் தமிழக மக்களின் உணர்வை மதித்து செயல்பட வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. அறிக்கை விடுத்து உள்ளார்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்நாடு அரசினால் தயாரிக்கப்பட்ட உரையை எந்தவித மாறுதல் மற்றும் திருத்தங்கள் இன்றி அப்படியே வாசிப்பது தான் கவர்னர் உரையின் மரபு. அரசலமைப்புச் சட்டம் அவருக்கு தந்த உரிமையின்படி தமிழக அரசின் செயல் திட்டங்களை முன்மொழிவது மட்டுமே அவரது கடமை. ஆனால் தமிழக சட்டசபையில் கவர்னர் உரையில், அத்தகைய மரபை மீறி தகுதிக்கு பொருந்தாமல் தன்னுடைய செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார் கவர்னர் ரவி. திராவிட மாடல் ஆட்சி என்ற வார்த்தையை உச்சரிக்காமல், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும் வாசிக்காமல், தமிழ்நாடு அமைதிப்பூங்கா, சமூக நீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற வார்த்தைகளையும் தவிர்த்து இருக்கிறார்.இது அவரது உள்நோக்கத்தை பிரதிபலிக்கிறது. வரம்பு மீறி செயல்படும் அவரது இத்தகைய செயல் கடுமையான கண்டனத்துக்குரியது. ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலை வெளிப்படுத்தி இருக்கிறார். தற்போது சட்டசபையின் மரபையும் மீறி தன்னுடைய தகுதியையும் மறந்து செயல்பட்டு வருவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு உகந்ததல்ல. எனவே கவர்னர் தமிழக மக்களின் உணர்வை மதித்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.