< Back
மாநில செய்திகள்
வடஇந்தியாவில் பாஜக எப்படி ஆட்சியை பிடித்தது என்று எங்களுக்கு தெரியும்... எச்சரிக்கையாக இருக்கிறோம் - ஈபிஎஸ் தரப்பு பொன்னையன்
மாநில செய்திகள்

வடஇந்தியாவில் பாஜக எப்படி ஆட்சியை பிடித்தது என்று எங்களுக்கு தெரியும்... எச்சரிக்கையாக இருக்கிறோம் - ஈபிஎஸ் தரப்பு பொன்னையன்

தினத்தந்தி
|
3 Feb 2023 11:15 AM IST

வடநாட்டில் ஆட்சிகளை எப்படியெல்லாம் பாஜக பிடித்தது என்பது மக்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசினார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. பல்வேறு கட்சிகள் வேட்பாளரை களமிறக்கி வரும் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வேட்பாளராக தென்னரசு களமிறக்கப்பட்டுள்ளார். அதேவேளை, ஓ பன்னீர் செல்வம் தரப்பில் செந்தில் முருகன் களமிறக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு என்ன என்பது குறித்து இதுவரை முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா? களத்தில் இருந்து விலகுமா? அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தருமா? ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கு ஆதரவு தருமா? என்பதில் தொடர்ந்து குழப்பாமான சூழ்நிலை நிலவி வந்தது.

இந்த சூழ்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று காலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பிற்கு பின் ஓ.பன்னீர் செல்வத்தையும் அண்ணாமலை நேரில் சந்தித்தார். அடுத்தடுத்த சந்திப்புகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

பாஜக வடநாட்டில் எப்படிப்பட்ட செயல்பாடுகளையெல்லாம் செய்தது... பாஜகவின் நட்பு ஆட்சிகள் எப்படியெல்லாம் கவிழ்ந்தன... அந்த ஆட்சிகளை எப்படியெல்லாம் பாஜக பிடித்தது என்பது உங்களுக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்.

தேசிய ஜனநாயக கூட்டணி இப்போது இருக்கிறதா? அல்லது உடைந்துவிட்டதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பொன்னையன், உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜக தனியாகத்தானே நின்றது. இந்த கேள்விக்கே பொருள் இல்லை.

பாஜக உடனான கூட்டணி அதிமுகவுக்கு ஆபத்து என்று நினைக்கிறீர்களா? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிற காரணத்தால் பாஜகவும் எங்களோடு இருக்கலாம் அல்லவா... எங்களை விரும்பலாம் அல்லவா... எங்களுக்காக பணியாற்றலாம் அல்லவா... காத்திருந்து பாருங்கள்...

அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதை விரும்புகிறீர்களா? இல்லையா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பொன்னையன், திமுக நீங்களாக எல்லோருமே எங்களோடு இருந்தால் நாங்கள் வரவேற்கத்தான் செய்வோம்' என்றார்.

மேலும் செய்திகள்