< Back
மாநில செய்திகள்
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் நீதி பரிபாலனத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளோம் - ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி பேச்சு
மாநில செய்திகள்

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் நீதி பரிபாலனத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளோம் - ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி பேச்சு

தினத்தந்தி
|
30 April 2023 12:45 AM IST

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் நீதி பரிபாலன முறையில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்று ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி பேசினார்.

புதிய கோர்ட்டுகள்

சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் கோர்ட்டு வளாகத்தில், காசோலை மோசடி வழக்குகளை விசாரிக்க 2 கோர்ட்டுகள், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்யும் வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு கோர்ட்டு, சிறு குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒரு நடமாடும் (ஆன்லைன்) கோர்ட்டு, ரெயில்வே தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் ஒரு நடமாடும் கோர்ட்டு என 5 புதிய கோர்ட்டுகளின் திறப்புவிழா நேற்று நடந்தது.

புதிய கோர்ட்டுகளை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, கிருஷ்ணன் ராமசாமி, டி.பரத சக்கரவர்த்தி, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன், எழும்பூர் கோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் சந்தன்பாபு, செயலாளர் துரைகண்ணன் உள்பட மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நீதி பரிபாலனத்தின் முன்னேற்றம்

சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.அல்லி வரவேற்றார். தலைமை மாஜிஸ்திரேட்டு என்.கோவிந்தராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேசியதாவது:-

ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற நீதி பரிபாலன முறையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது நாம் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளோம். அந்தக் காலத்தில், வழக்குகளை தாக்கல் செய்வது, வாதாடுவது போன்றவற்றுக்கு நேரில் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால் தற்போது ஆன்லைன் மூலம் வழக்குகளை தாக்கல் செய்யலாம், வாதாடலாம். இப்போது காகிதமில்லா நீதி பரிபாலனம் நடைபெறுகிறது.

நேரம் முக்கியம்

மக்கள் மத்தியில் நீதித்துறை குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், நம் நாட்டில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும். நாடு முழுவதும் சுமார் 4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குளை எல்லாம் விரைவாக முடிவுக்கு கொண்டுவர நேரம்தான் முக்கியமானதாக உள்ளது.

அதனால் வக்கீல்கள் தங்களது வாதங்களை சுருக்கமாகவும், விரைவாகவும் முன்வைத்து, வழக்குகளை துரிதமாக முடிவுக்கு கொண்டுவர உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உள்கட்டமைப்பு வசதிகள்

நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, 'எழும்பூர் கோர்ட்டில் நல்ல சூழ்நிலை தொடர வேண்டும். தொழிலில் மட்டும் வக்கீல்கள் தங்கள் முழு கவனத்தை செலுத்த வேண்டும்' என்று அறிவுரை வழங்கினார்.

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பேசும்போது, 'தமிழ்நாடு நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளன' என்றார்.

நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி தன்னுடைய உரையில், 'தமிழ்நாடு உள்பட 3 மாநிலங்களில மட்டுமே சிவில் வழக்குகளைவிட கிரிமினல் வழக்குகள் குறைவாக உள்ளன' என்றார்.

விழிப்புணர்வு

அமைச்சர் எஸ்.ரகுபதி பேசும்போது, 'நீதித்துறைக்கு பாரபட்சம் காட்டாமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். நடப்பாண்டில் நீதித்துறைக்கு ரூ.1,747 கோடியை ஒதுக்கியுள்ளார். நாட்டிலேயே அதிக கோர்ட்டுகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதற்காக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து விட்டதாக அர்த்தம் இல்லை. மக்கள் மத்தியில் நீதித்துறை குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது நீதிக்காக தைரியமாக கோர்ட்டுக்கு வருகிறார்கள்' என்று கூறினார்.

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மத்திய குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அமைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். அதேபோல புதிய கோர்ட்டுகள் தொடங்கியதற்கு கலெக்டர் அமிர்தஜோதி வாழ்த்து தெரிவித்து பேசினார்.

மேலும் செய்திகள்