< Back
மாநில செய்திகள்
தொடர் முன்னெச்சரிக்கைகள் மூலம் பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

'தொடர் முன்னெச்சரிக்கைகள் மூலம் பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளோம்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
3 Dec 2023 6:16 PM IST

அவசரகால கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.

இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது. 'மிக்ஜம்' புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் படிப்படியாக மழை அதிகரித்து நாளை மாலை வரை கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது நாளை மதியம் வட தமிழக கடற்கரையோரம் நகர்ந்து அதன் பிறகு ஆந்திர கடற்கரையை நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது;-

"அவசரகால கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. 2.44 கோடி மக்களுக்கு புயல் முன்னெச்சரிக்கை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. தொடர் முன்னெச்சரிக்கைகள் மூலம் பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளோம்.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 1,000 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் முழு அர்ப்பணிப்போடு மேற்கொள்ள வேண்டும். புயலின்போது மரங்கள் மின்கம்பங்கள் கீழே விழும் அபாயம் உள்ளதால், மக்கள் வெளியே வராமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது."

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்