இனி அவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை...! புதிய கட்சி தொடங்க ஓ.பன்னீர் செல்வம் திட்டமா...?
|எங்கள் நிலையை மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்வதற்கு வரும் 24 ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாடு முப்பெரும் விழாவாக நடத்த இருக்கிறோம் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
சென்னை
சென்னையில் இன்று ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது அணியின் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி அளித்தார். அப்போது அவர்கள் கூறியதாவது;-
அ.தி.மு.க.அரசியலில் ஒரு மாயையில் நாங்கள் சிக்கியிருக்கிறோம். பொதுக்குழு, மாவட்ட செயலாளர்கள் முறைப்படி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். தலைமை அவர்களை நியமிக்கிறது. அவர்கள் எல்லாம் சேர்ந்து தலைமையை நியமிக்கிறார்கள். ஆகவே இந்த பொதுக்குழு என்பது தொண்டர்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று. இந்த பொதுக்குழு சரியில்லை என்று நீதிமன்றம் சென்றோம்.
சென்னை உயர் நீதிமன்ற அமர்வு இந்த பொதுக்குழு செல்லும் என்று சொன்னது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு அதிகாரம் படைத்த ஓபிஎஸ் கையெழுத்து இல்லை என்று சொன்ன போது அது பற்றி நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம் என்றது. உச்ச நீதிமன்றம் சென்றோம். உச்ச நீதிமன்றம் என்றும் இல்லாத அளவுக்கு ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்று நம்மை விட ஆர்வமாக தேர்தலுக்கு முன்பாகவே தீர்ப்பை வழங்கினார்கள். பொதுக்குழு செல்லும்.
ஆனால், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம் என்று சொன்னது. மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் சென்றோம். பொதுக்குழுவே செல்லும் என்று உச்ச நீதிமன்றம் சொன்ன போது தீர்மானங்கள் செல்லாமல் போயிவிடுமா? என்று கேட்கிறார்கள்
தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று எம்.ஜி.ஆர் உயில் எழுதி வைத்தார் அது என்ன ஆனது. சாதாரணமாக ஒரு கடைநிலை ஊழியரை நீக்க வேண்டும் என்றால் கூட 15 நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். ஆனால், ஒருங்கிணைப்பாளரை உடனடியாக நீக்கினார்களே இதற்கு எல்லாம் இன்றைக்கு பதில் இல்லை.
ஆகவே நாங்கள் தொடுத்த வழக்குகள் நீதிமன்றத்தில் கால்பந்து ஆட்டத்தில் உதைக்கப்படுகிற பந்தை போல அலைக்கழிக்கப்படுகிறதே தவிர நாம் எழுப்புகின்ற கேள்விக்கு தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. எதிர்காலத்தில் கிடைக்கும் என்று நம்புவோம். ஆனால் இந்த மாயை எப்போது விலகும் என்றால் மக்கள் மன்றத்திற்கு சென்றால் விலகும்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் நல்ல தீர்ப்பை எங்கள் பக்கம் வழங்குவாரக்ள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த எதிர்பார்ப்புக்கு ஈரோடு இடைத்தேர்தல் ஒரு ஊக்கத்தை தருகிறது. ஆகவே இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்படும் என்கிற வகையிலே நாங்கள் செல்ல இருப்பது மக்கள் மன்றம் தான்.
தமிழ்நாட்டு மக்கள் மிகவும் சாமர்த்தியமான நல்ல முடிவை வழங்கக் கூடியவர்கள். எனது 67 ஆண்டு கால அரசியல் அனுபவத்தில் இருந்து இதை சொல்கிறேன். ஆகவே எங்கள் நிலையை மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்வதற்கு வரும் 24 ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாடு முப்பெரும் விழாவாக நடத்த இருக்கிறோம்.
ஈரோட்டில் பணபலம் படைபலம் இருந்தும் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைந்தார். மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.
எங்கள் நிலையை மக்கள் மன்றத்தில் எடுத்து செல்ல வரும் 24 ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்த இருக்கிறோம். முப்பெரும் விழாவாக திருச்சியில் மாநாடு நடத்த முடிவு செய்து இருக்கிறோம்.
எங்களின் முறையீடு இனிமேல் மக்களிடம் தான் இருக்கும். இனி அவர்களை (இபிஎஸ் தரப்பு) பற்றி எங்களுக்கு கவலை இல்லை" என கூறினார்
1977- எம்.ஜி.ஆருக்கு நாட்டு மக்கள் சரியான தீர்ப்பினை வழங்கி அண்ணா திமுகதான் உண்மையான திமுக என்றனர். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுக பிளவுபட்டது. அன்றைக்கு ஜானகி அணியில் தான் அதிக பொதுக்குழு உறுப்பினர்களும் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்தனர்.
ஜெயலலிதா அணியில் 33 எம்.எல்.ஏக்கள் தான். 1987-ல் ஏற்பட்ட பிளவுக்கு 1989-ல் மக்கள் சரியான தீர்ப்பு கொடுத்தார்கள். ஏன் இதை சொல்கிறோம் என்றால் இந்த இயக்கத்தில் பிளவு ஏற்படும் போதெல்லாம் சரியான தீர்ப்பை மக்கள்தான் வழங்குகிறார்கள். ஆகவே மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
ஈரோடு கிழக்கு தேர்தல் மூலம் எங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. அதிமுகவிற்கு 6 அம்சங்கள் சாதகமாக இருந்தது. அதுபோக பணபலம், படைபலத்தை பயன்படுத்தியும் எடப்பாடிக்கு பழானிசாமிக்கு தோல்வியே கிடைத்தது. மக்கள் அளித்த தீர்ப்பு அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.