செஸ் ஒலிம்பியாட் சுடரை வரவேற்க ஆவலுடன் உள்ளோம் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|செஸ் ஒலிம்பியாட்டின் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
சென்னை,
1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் புகழ் பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 189 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று தொடர் ஜோதி ஓட்டம் நடத்தப்படும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்து இருந்தது. செஸ் ஒலிம்பியாட்டின் முதல் ஜோதி ஓட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. இந்திராகாந்தி மைதானத்தில் மாலை 5 மணியளவில் இந்த ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம், 40 நாட்கள் இந்தியாவில் உள்ள 75 நகரங்களில் வலம் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 27-ந் தேதி போட்டி ஒலிம்பியாட் ஜோதி, மாமல்லபுரத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
உலக செஸ் பேரவை முதன்முறையாகத் தொடங்கியுள்ள செஸ் ஒலிம்பியாட் சுடரின் தொடர் ஓட்டத்தை இந்தியப் பிரதமர் தொடங்கி வைத்துள்ள இவ்வேளையில், இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிகுந்த இத்தருணத்தின் பின்னணியில் இருப்பதில் சென்னை பெருமை கொள்கிறது. தொடர் ஓட்டத்தின் முடிவில் மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் சுடரை வரவேற்க ஆவலுடன் உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.