அண்ணாமலை வெளியிடும் பட்டியலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம் - டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
|அண்ணாமலை வெளியிடும் பட்டியலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம் என்று திமுக செய்தித் தொடர்புத்தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
சென்னை,
அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தித் தொடர்புத்தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமே தெரியாதுனு நினைக்கிறேன். ஆர்.எஸ்.பொம்மை வழக்கிற்கு பிறகு எந்த சட்டமும் கலைக்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி தன்னிடம் உள்ளவர்களை தக்க வைத்துகொள்ள ஏதோ பேசி வருகிறார்.
நாங்களே ஆட்சியைக் கலைத்தால்தான் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும். மீண்டும் முதலமைச்சராவேன் என எடப்பாடி பழனிசாமி சொன்னால்தான் அவருடன் உள்ளவர்கள் இருப்பார்கள், இல்லையெனில் ஓ.பன்னீர்செல்வத்திடம் சென்றுவிடுவார்கள்.
பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிடும் பட்டியலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். இபிஎஸ், ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் சொத்துப்பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும்.
சொன்னதை செய்யமாட்டோம், சொல்லாததை செய்வோம் என்ற அடிப்படையில் பிரதமர் மோடி செயல்படுகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் கொள்கையாக அதை சொல்லிக்கொண்டிருக்கிறார்களே தவிர அது நடைமுறை சாத்தியம் இல்லை என்பது அவர்களுக்கும் (பாஜக அரசு) தெரியும், இந்த உலகத்திற்கும் தெரியும்.
பணக்காரர்களுக்காகவே பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. அடுத்தாண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் வருகிறது என்றால் தற்போது கர்நாடகாவில் எதற்கு தேர்தல்?. இன்று நடைபெறுவது அரசியல் மாநாடு அல்ல; சமூக நீதிக்கான மாநாடு.
இவ்வாறு அவர் கூறினார்.