திண்டுக்கல்
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|மதுக்கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஜெயசுந்தர் தலைமையில் அந்த கட்சியினர், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடக்கோரி கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க போவதாக கூறினர். ஆனால் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் அனைவரும் செல்லக்கூடாது என்றும், ஒருசிலர் மட்டுமே செல்லலாம் என்று கூறி போலீசார் அவர்களை நுழைவுவாயிலில் தடுத்தனர்.
இதனால் நாம் தமிழர் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுக்கடைகளை மூடக்கோரி கோஷமிட்டனர். மேலும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க பெண்கள் சிலரை மட்டுமே அனுமதித்த போலீசார், மற்றவர்களை நுழைவுவாயிலிலேயே தடுத்து நிறுத்தினர்.
இதற்கிடையே கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயசுந்தர், மகளிர் பாசறை செயலாளர் அங்காளபரமேஸ்வரி, இணை செயலாளர் சித்ரா உள்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை வேனில் அழைத்து சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.