< Back
மாநில செய்திகள்
சவாலான சூழலில் உள்ளோம்: கூடுதல் நிவாரண முகாம்கள் அமைக்க முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு
மாநில செய்திகள்

சவாலான சூழலில் உள்ளோம்: கூடுதல் நிவாரண முகாம்கள் அமைக்க முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு

தினத்தந்தி
|
18 Dec 2023 9:55 PM IST

குறுகிய காலத்திற்குள் நிவாரண உதவிகளை வழங்க வேண்டிய சவாலான சூழலில் உள்ளோம் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் விடாமல் பெய்த மழையால் நான்கு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக தாமிபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதன் கரையோர பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல இடங்களிலும் சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தனித்தீவு போல கிராமங்கள் காட்சி அளிக்கின்றன. இந்த நிலையில், அங்கு நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ள முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், அங்கிருந்தபடியே காணொலி வாயிலாக 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் அமைச்சர் உதயநிதி உள்பட அதிகாரிகளும் பங்கேற்றனர். அதன்பிறகு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது;-

குறுகிய காலத்திற்குள் நிவாரண உதவிகளை வழங்க வேண்டிய சவாலான சூழலில் உள்ளோம். வெள்ளபெருக்கால் பாதிக்கபட்டோரை உடனே மீட்டு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களின் பல பகுதிகள் மக்கள் இன்னமும் நீரில் மூழ்கியுள்ளனர். ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை உடன் இணைந்து காவல், தீ அணைப்பு, வருவாய்த்துறையினர் களப்பணியாற்ற வேண்டும். தென் மவாட்டங்களில் கூடுதல் நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும். சென்னை பெருவெள்ள மீட்பு பணிகள் போல தற்போதும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்