பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்த 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் - சோனியா காந்தி
|சென்னையில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்த 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, தி.மு.க. மகளிர் அணி சார்பில் 'மகளிர் உரிமை மாநாடு' சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.
'இந்தியா' கூட்டணி பெண் தலைவர்கள்
மாநாட்டுக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகித்தார். தி.மு.க. மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் வரவேற்று பேசினார்..
இதில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே எம்.பி., ஐக்கிய ஜனதா தளம் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் லெஷி சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் பிரிவு உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆனி ராஜா, ஆம் ஆத்மி கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ராக்கி பிட்லன், திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் டிம்பிள் யாதவ் எம்.பி. ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
தேசிய இயக்கம்
மகளிர் உரிமை மாநாட்டில் சோனியாகாந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த அருமையான நாளில் ஒரு மாபெரும் தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படுகின்ற மகளிர் உரிமை மாநாட்டிற்கு என்னை அழைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. தனது வாழ்க்கை முழுமையும் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர் கருணாநிதி. எழுத்தாளராக, பத்திரிகையாளராக, முதல்-அமைச்சராக, நிர்வாகியாக அவர் ஆற்றிய பணிகள் மகத்தானவை.
மாநிலம், மொழி, சாதி, மத நம்பிக்கை ஆகியவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டு அனைவரையும் பார்க்கக்கூடிய தத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். தன்னுடைய வாழ்நாளின்போது பாலின சமத்துவத்தை சிந்தித்து அதற்கான போராளியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இன்று அது, தேசிய இயக்கமாக கொண்டாடப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
மகளிருக்கு அதிகாரம்
இந்திய பெண்கள் பல்வேறு துறைகளில் ஒளிருகிறார்கள். குறிப்பாக விஞ்ஞானம், அறிவாற்றல், கலாசாரம், விளையாட்டு ஆகிய இவற்றுக்கெல்லாம் மேலாக மக்களின் தலைவராக அவர்கள் ஆற்றும் பணி மகத்தானது. இருந்தாலும், இந்த போராட்டம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். இன்னும் பல தடைகளை தாண்ட வேண்டும்.
தடைகளை தாண்டித்தான் சமத்துவத்தை பெறும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. ஒரு ஆணை நீ படிக்க வைத்தால் ஒரு தனி நபரைத்தான் படிக்க வைக்கிறாய். ஒரு பெண்ணை படிக்க வைத்தால் அது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதாக உள்ளது. மகளிருக்கு அதிகாரம் அளித்தால் இந்தியாவை அதிகாரப்படுத்துகிறோம் என்ற வார்த்தைகளை யாரால் மறக்க முடியும்.
இந்திரா காந்தி காண்பித்த தலைமைத்துவம், ஆற்றல், வழிகாட்டுதல் போன்றவை ஒரு பெண் எப்படி செயல்பட முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாகும். ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்காகவும், வறுமையை ஒழிப்பதற்காகவும் அர்ப்பணிப்போடு அவர் ஆற்றிய பணியை மறக்க முடியாது.
ராஜீவ்காந்தி கொண்டு வந்தார்
வரலாற்று புகழ்மிக்க 33 சதவீத இடஒதுக்கீட்டை பெண்களுக்காக பஞ்சாயத்து ராஜ் சட்டத்திலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் ராஜீவ்காந்தி கொண்டு வந்தார். அந்த சட்டம், சமூகத்தின் அடித்தளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி பெண்களுக்கு தலைமைப் பொறுப்புகளை அளித்து, பெரிய சமூகப் புரட்சிக்கு வித்திடும் திட்டமாக அமைந்தது.
அன்று ராஜீவ்காந்தி கொண்டு வந்த இடஒதுக்கீடுதான், இன்று நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தும் சட்டத்திற்கான முன்னெடுப்பாக அமைந்தது. இதை கொண்டுவர காங்கிரஸ் பல முயற்சிகளை மேற்கொண்டது.
மாநிலங்களவையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளைக் கொண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் ஒரு கருத்தொற்றுமை உருவாகாத காராணத்தினால் அந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இன்று அந்த சட்டம் நிறைவேறி இருக்கிறது என்றாலும் கூட அதற்கு நாம் ஏற்கனவே எடுத்த முயற்சிகளும், கொடுத்த அழுத்தங்களும் அதிகம். ஆனால் அந்த சட்டம் என்று அமல்படுத்தப்படும் என்ற ஒரு தெளிவே இல்லை.
இந்தியா கூட்டணிதான் நிறைவேற்றும்
இந்த ஆண்டா, அடுத்த ஆண்டா அல்லது இன்னும் எத்தனை ஆண்டு ஆகும் என்ற நிலையில், அந்த சட்டம் உருவாக்கப்பட்டு இருப்பது, நாளை வருகின்ற இந்தியா கூட்டணி வந்துதான் அந்த சட்டத்தை நிறைவேற்றித் தரும் என்ற எண்ணத்தை தந்துள்ளது. அந்த சட்டத்தால் பலர் மகிழ்ச்சியாக இல்லை. நாங்களும் மகிழ்ச்சியாக இல்லை. 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை அடையும் வரை பெண்கள் நாங்கள் போராடுவோம். ஆண்கள் அதை விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி.
அண்ணா, கருணாநிதி அரசுகள் செயல்படுத்திய திட்டங்கள், பெண்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தந்துள்ளன. அந்த அடிப்படையில்தான் இன்று தமிழ்நாடு, இந்தியாவே மகளிர் சமத்துவத்தையும், உரிமைகளையும் புகழ்ந்து கொண்டாடக் கூடிய ஒளி விளக்காக திகழ்கிறது. கருணாநிதி ஆட்சி காலத்தில்தான் 1973-ம் ஆண்டில் காவல்துறையில் பெண்களின் பங்கு உறுதி செய்யப்பட்டது.
அரசு பணிகள்
கருணாநிதி செய்த மற்றொரு சீர்திருத்தம் என்னவென்றால், அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு வழங்கியதாகும். அதனால் அரசுப் பணிகளில் 30 சதவீதம் பெண்கள் இடம் பெற்றார்கள். இப்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அதை 40 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழக அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு மருத்துவத் திட்டங்களால் தமிழகத்தில் தாய் சேய் இறப்பு விகிதம் இன்று இந்தியாவிலேயே குறைந்திருக்கிறது.
கடந்த 70 ஆண்டுகளாக நாம் செய்த நல்ல முயற்சிகளையெல்லாம் சீரழிக்கிற வகையில் செயல்படுவது நமக்கு ஏற்பட்டுள்ள துரதிருஷ்டம். பாரம்பரிய வழியில்தான் இருக்க வேண்டும் என்றுதான் இந்த அரசு நினைக்கிறதே தவிர எந்தவித சுதந்திரத்தையும் அளிக்க அவர்கள் தயாராக இல்லை.
நிறைவேற்றியே தீருவோம்
இதை போலத்தான் எல்லா துறைகளிலும், எல்லா சுதந்திரத்துக்கும், சமத்துவத்துக்கும், அறம் சார்ந்த சமுதாயத்துக்குமான நாம்பெற்ற அனைத்து உரிமைகளும் கடந்த 9 ஆண்டுகளாக சீரழிக்கப்பட்டு வருவதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நான் உறுதியாக நம்புகிறேன். ''இந்தியா'' கூட்டணி, இதைப்போல சமச்சீரற்ற தன்மைகளை நீக்கி பெண்களுக்கு உண்மையாகவே சமத்துவ உலகை உருவாக்கி தருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிச்சயம் மேற்கொள்ளும்.
இந்தியா கூட்டணி என்பது, மகளிர் இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நிறைவேற்றியே தீரும். அதை நிறைவேற்றி ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தியே தீருவோம். இங்கு கூடியுள்ள நாம் அதற்கான உறுதி எடுத்து, அதற்காக செயல்பட வேண்டும். இதை இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் நிச்சயம் செய்யும். நாம் அனைவரும் போராடுவோம். இதனை அனைவரும் சேர்ந்து சாதிப்போம். நன்றியுடன் உழைப்போம். வெற்றி நமதே.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.
மாநாட்டில் பங்கேற்றவர்கள்...
மாநாட்டில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.மாநாட்டின் நிறைவாக தி.மு.க. மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ராணி நன்றி கூறினார்.
மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டுக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை விமானம் மூலம் டெல்லி திரும்புகின்றனர்.