< Back
மாநில செய்திகள்
சட்டபூர்வமாக வந்தால் நாங்கள் அனுமதிக்கிறோம் - சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள்...!
கடலூர்
மாநில செய்திகள்

சட்டபூர்வமாக வந்தால் நாங்கள் அனுமதிக்கிறோம் - சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள்...!

தினத்தந்தி
|
8 Jun 2022 4:44 PM IST

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் சட்டபூர்வமாக வந்தால் நாங்கள் அனுமதிக்கிறோம் என்று பொது தீட்சிதர்கள் தெரிவித்து உள்ளனர்.


உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். தமிழக அரசு கோவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்த அனுமதி அளித்தது. கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கோவிலின் வரவு செலவு கணக்குகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் 7, 8-ம் தேதிகளில் ஆய்வு செய்வதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று இந்துசமய அறநிலைத்துறை சிறப்பு அதிகாரி சுகுமார் தலைமையில், இணை ஆணையர்கள் நடராஜன், லட்சுமணன், கோட்ட தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், உதவி ஆணையர் அரவிந்தன், கடலூர் இணை ஆணையர் அசோக்குமார், துணை ஆணையர் ஜோதி, உதவி ஆணையர் சந்திரன் ஆகியோர் குழுவாக காலை 10 மணி அளவில், நடராஜர் கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது குழுவினர் அனைவரும் கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசனம் செய்துவிட்டு நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களிடம் வரவு செலவு கணக்கு கேட்டனர்.

இதற்கு சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் வக்கீல் சந்திரசேகர் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

நடராஜர் கோவிலை ஆய்வு செய்ய சட்டரீதியான குழு இல்லை, உங்களுக்கு எந்த அதிகாரம் இல்லை, சட்டப்படி உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஆய்வுக்கு வந்திருக்க வேண்டும். இந்த ஆய்வு சட்ட விதிமுறையை பின்பற்றாமல் நடைபெறுகிறது. சட்டப்பூர்வமாக ஆய்வு செய்ய வந்தால் நாங்கள் அனுமதிக்கிறோம் என்று தீட்சிதர்கள் தரப்பில் தெரிவித்தார்.

இந்த நிலையில் 2-வது நாளாக இந்து சமய அறநிலைத்துறை குழுவினர் இன்று ஆய்வு செய்ய வந்தனர். இந்து சமய அறநிலைத்துறை சிறப்பு அதிகாரி இரா. சுகுமார் தலைமையில் இன்று காலை 10.30 மணி அளவில் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தனர். பின்னர் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, பொது தீட்சிதர்களிடம் வரவு செலவு கணக்கு விவரங்களைகேட்டனர்.

அப்போது தீட்சிதர்கள் வரவு செலவு கணக்குகளை காட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி ஆய்வுக்கு வந்திருக்க வேண்டும். தற்போது இங்கு எங்கள் வக்கீல், கோவில் செயலாளர், யாரும் இல்லை என்று கூறி வரவு செலவு கணக்குகளை காண்பிக்க மறுத்துவிட்டனர்.

அதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை குழுவினர் அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்