ராமநாதபுரம்
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள தர்பூசணி
|ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் விற்பனைக்காக தர்பூசணி குவித்து வைக்கப்பட்டுள்ளன.
ஆர்.எஸ்.மங்கலம்,
தமிழகம் முழுவதும் பனி சீசன் முடிவடைந்து தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. குறிப்பாக காலை 8 மணிக்கு வெயிலின் தாக்கம் தொடங்கிவிடுகின்றது. பகல் 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரையிலும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தண்ணீர் பழம் என்று சொல்லக்கூடிய தர்பூசணி பழங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.மங்கலம் முக்கிய சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள இந்த தர்பூசணி பழங்களை ஆர்.எஸ்.மங்கலம், மங்கலம், சருகனி, சனவேலி, ஆனந்தூர் சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து தர்பூசணி வியாபாரி மணிகண்டன் கூறும்போது, இந்த தர்பூசணி பழங்கள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் இருந்து வாங்கி இங்கே விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தற்போதுதான் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் தற்போது விலை சற்று அதிகமாக இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல விலை குறைந்து விடும். திண்டுக்கல், தஞ்சாவூர், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு தர்பூசணி பழம் விவசாயம் அதிகமாகவே நடைபெற்று வருகின்றது. தர்பூசணி விளைச்சலும் அதிகமாகவே உள்ளதால் இன்னும் விலை குறையவே வாய்ப்பு அதிகம். கோடை காலம் தற்போதுதான் ஆரம்பித்துள்ளதால் வியாபாரம் நன்றாகவே இருக்கும் என நினைக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.