வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது
|முதல் நாளான இன்று அணையிலிருந்து 2000 கனஅடி நீரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திறந்து வைத்தார்.
கூடலூர்,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 70 அடியை எட்டியது. அதன்பின்னர் திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இருந்தபோதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 70 அடியில் நீடித்து வருகிறது. இந்த நிலையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் வைகை பூர்வீக பாசனபகுதி 1,2,3 பகுதி விவசாயிகள் கண்மாய்களில் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதனைஏற்று இன்று முதல் அடுத்தமாதம் 11-ந்தேதி 3 கட்டமாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இன்று காலை 8 மணிமுதல் 31-ந்தேதி வரை வைகை பூர்வீக பாசனபகுதி 3-ல் உள்ள கண்மாய்களுக்காக 840 மி.கனஅடிநீர் திறக்கப்பட உள்ளது.
முதல் நாளான இன்று அணையிலிருந்து 2000 கனஅடி நீரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன் திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து படிப்படியாக தண்ணீர் திறப்பை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தமாதம் 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 4 நாட்களுக்கு பூர்வீக பாசனபகுதி 2-ல் உள்ள 4 கண்மாய்களுக்காக 345 மி.கனஅடிநீர் திறக்கப்பட உள்ளது.
8-ந்தேதி முதல் 11-ந்தேதி 3 நாட்களுக்கு வைகை பூர்வீக பாசனபகுதி 1-ல் உள்ள கண்மாய்களுக்காக 192 மி.கனஅடி திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் 5 மாவட்ட ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கவோ, கடந்து செல்லவோ, துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு 1191 கனஅடி நீர் வருகிறது. 70.13 அடியாக நீர்மட்டம் உள்ளது. ஏற்கனவே 769 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்றுமுதல் 2769 கனஅடியாக உயர்த்தப்ப்டடது.