தஞ்சாவூர்
இறுதிவரை சென்றடையும் முன்பு 3 நாட்களில் நிறுத்தப்பட்ட தண்ணீர்
|சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் இறுதிவரை சென்றடையும் முன்பு 3 நாட்களில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
சேதுபாவாசத்திரம்,
சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் இறுதிவரை சென்றடையும் முன்பு 3 நாட்களில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
கடைமடை சாகுபடி
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிக்கு வழக்கம்போல் மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறந்து கடைமடை வந்தடைந்த தண்ணீர் கடைமடை இறுதிவரை சென்றடையும் முன் 3 நாட்களில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கடைமடை விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்து உள்ளனர். சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒரு போகம் சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதி 6-ம் நம்பர் வாய்க்காலின் இறுதி பகுதி உடையநாடு, மரக்காவலசை ஆகும்.
ஆடிப்பட்டம்
இந்த ஆண்டாவது ஆடிப்பட்டம் சாகுபடி நடைபெறும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆடிப்பட்டம் சாகுபடி விவசாயிகளுக்கு நல்ல மகசூலை கொடுப்பதுடன் அறுவடை நேரத்தில் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படாது. ஆண்டுதோறும் ஜூன் 12-ந் திறக்கப்படும் மேட்டூர் அணை கடந்த ஆண்டு மே 26-ந் தேதி திறக்கப்பட்டது. இந்த ஆண்டு மேட்டூர் அணை கடந்த 12-ந் தேதி திறக்கப்பட்டது. கல்லணை 17 -ந் தேதி திறக்கப்பட்டது. இதன்பின் கடந்த 20 -ந் தேதி கடைமடை பகுதியான புதுப்பட்டிணம் மற்றும் சேதுபாவாசத்திரம் வாய்க்கால்களில் தண்ணீர் வந்து சேர்ந்தது.
தண்ணீர் நிறுத்தப்பட்டது
கடைமடை பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய ஏரிகள் உள்ளது. ஏரிகளை நிரப்ப கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 30 நாட்கள் முழுமையாக தண்ணீர் வழங்கினால் ஏரிகளை நிரப்புவதுடன் ஒரு போக சம்பா சாகுபடிக்கு நாற்று விடும் பணிகளை தொடங்கி விடலாம் என கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் 6- ம் நம்பர் வாய்க்காலில் வீரியங்கோட்டை வரையில்தான் தண்ணீர் சென்றுள்ளது. உடையநாடு, மரக்காவலசை பகுதியை தண்ணீர் அடையும் முன்பு 3 நாட்கள் மட்டும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வழங்கிவிட்டு தண்ணீர் நிறுத்தப்பட்டுவிட்டது.
விவசாயிகள் வேதனை
இதனால் கடந்த 10 நாட்களாக வாய்க்கால்கள் வறண்டு கிடக்கின்றன.மேலும் கல்லணையில் இருந்து முழு கொள்ளளவு தண்ணீர் எடுக்க முடியாததால் 5 நாட்கள் வீதம் முறை வைத்து தண்ணீர் வழங்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இருந்தும் முழு கொள்ளளவு தண்ணீர் எடுத்தால்தான் முறை வைக்காமல் தண்ணீர் வழங்க முடியும். முறை வைத்து தண்ணீர் வழங்கினால் இந்த ஆண்டு கடைமடை பகுதியில் சம்பா நெல் சாகுபடி செய்யும் மனநிலையில் இல்லை என கடைமடை விவசாயிகள் வேதனையோடு கூறுகிறாா்கள்.