நீலகிரி
ஊட்டியில் நீர் பனிப்பொழிவு தொடக்கம்
|ஊட்டியில் நீர் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது.
ஊட்டியில் நீர் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது.
நீர் பனிப்பொழிவு
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனிக்காலம் நிலவுகிறது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக சீதோஷ்ண காலநிலை மாறுபாடு காரணமாக, நீலகிரியில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்குகிறது. இதற்கிடையே இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை.
மேலும் இந்த மாதம் தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழையும் இதுவரை தொடங்கவில்லை. வழக்கமாக நவம்பர் மாதத்தில் உறைபனி தாக்கமும் மாத இறுதியில் நீர் பனிப்பொழிவும் தொடங்கும்.ஆனால், தற்போது முன்கூட்டியே நீர் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது.
கடுங்குளிர்
இந்தநிலையில் நேற்று ஊட்டி நகரில் பெரும்பாலான இடங்களில் நீர் பனிப்பொழிவு காணப்பட்டது. நீர் நிலைகள் அருகே உள்ள புல் மைதானங்கள், தாவரவியல் பூங்கா, மார்க்கெட் பகுதி, குதிரை பந்தயம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் நீர் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. அதேபோல் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது நீர் பனி அதிகளவில் காணப்பட்டது.
தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளிகளில் நீர்த்துளிகள் வழக்கத்தை விட அதிகமாக இருந்தன. ஊட்டி நகரில் புல்வெளிகளில் நடைபயிற்சி செய்தவர்களின் காலணிகள் நீர் பனியால் நனைந்தன. ஊட்டியில் நீர் பனிப்பொழிவு காரணமாக கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
இரவு, அதிகாலை வேளையில் நீர் பனிப்பொழிவும், பகலில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து உள்ளது. இதனால் வருகிற நாட்களில் உறைப்பனியின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும். ஊட்டியில் கடும் நீர் பனிப்பொழிவு கொட்டுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.