திருநெல்வேலி
வெள்ளநீர் கால்வாய் திட்டத்தில் சோதனை ஓட்டத்துக்கு பாபநாசத்தில் இருந்து தண்ணீர் திறக்க கூடாது; கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
|வெள்ளநீர் கால்வாய் திட்டத்திற்கு பாபநாசத்தில் இருந்து சோதனை ஓட்டத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என்று கூறி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளநீர் கால்வாய் திட்டத்திற்கு பாபநாசத்தில் இருந்து சோதனை ஓட்டத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என்று கூறி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் பகுதி முன்னேற்ற சங்கத்தினர் தலைவர் பாபநாசம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து வெள்ளநீர் கால்வாய் திட்டத்தின் சோதனைக்கு தண்ணீர் பாபநாசம் அணையிலிருந்து திறப்பதை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் சாலையில் அதிக அளவில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றார்கள். உடனே கலெக்டர் அலுவலக கதவு பூட்டப்பட்டது. பின்னர் நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அமலைச்செடிகள்
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
பாபநாசம் அணைக்கட்டில் 82 அடி தண்ணீர் இருக்கும் நிலையில் 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு தாமிரபரணி வெள்ள நீர் கால்வாயில் சோதனைக்காக தண்ணீர் எடுக்கும் போது அணையில் தண்ணீர் இருக்காது.
மேலும் பிசான சாகுபடிக்காக காத்திருக்கும் கன்னடியன், கோடை மேலழகியான், நதியுண்ணி மற்றும் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள மற்ற கால்வாய் பாசன பகுதி விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். விவசாயம் பாதிக்கப்படும். கன்னடியன் கால்வாய் பாசன பகுதியில் ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகளால் கடைமடை வரை தண்ணீர் செல்லாமல் விவசாயிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.
எனவே சோதனை என்ற பெயரில் தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும். கால்வாயில் அடைத்துள்ள அமலைச் செடிகளை அகற்றி கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
பசும்பொன் தேசிய கழகத்தினர் மாநில துணைத்தலைவர் பாலு தேவர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு வாடகை வாகனத்தில் செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அங்கு போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.