< Back
மாநில செய்திகள்
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
மதுரை
மாநில செய்திகள்

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
22 July 2022 9:33 PM GMT

58 கிராம கால்வாய்க்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் குருமூா்த்தி, நீா்ப்பாசனத் துறை பெரியாறு-வைகை கோட்ட செயற்பொறியாளா் அன்புச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

பெரியாறு-வைகை பாசனத்திட்டத்தில் பல இடங்களில் தற்போது தான் நடவுப் பணி தொடங்கியுள்ளது. எனவே முறைப்பாசனத்தை இன்னும் 10 நாட்கள் கழித்து அமல்படுத்த வேண்டும். வைகை அணையில் அதிக அளவு நீா் இருப்பதால் ஒருபோக சாகுபடிக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-வது வாரத்தில் தண்ணீா் திறக்க வேண்டும். 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு உட்பட்ட கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து உடனடியாக தண்ணீா் திறக்க வேண்டும் கடந்த ஆண்டில் விடுபட்ட சடச்சிப்பட்டி கண்மாய்க்கு இந்த முறை தண்ணீா் கொண்டு செல்ல வேண்டும். பாப்பாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகுளம் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாகத் தண்ணீா் நிரப்ப வேண்டும். விவசாய மின்இணைப்பு வழங்கியதில் முறைகேடு நடந்து இருக்கிறது.

மாடக்குளம் கண்மாய்க்கு நீா் வரக்கூடிய மாடக்குளம் கால்வாய், நிலையூா் கால்வாய் ஆகியவற்றில் கழிவுநீா் கலக்கிறது. இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கண்மாய்களில் இருந்து வண்டல் மண் எடுத்துக் கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிராம நிா்வாக அலுவலா் தொடங்கி பலதுறை அலுவலா்களிடம் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. விவசாயிகளின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு வட்டார அளவில் சிறப்பு முகாம் நடத்தி ஒரே இடத்தில் அனைத்துத் துறை அலுவலா்களின் ஒப்புதலைப் பெற்று, வண்டல் மண் எடுப்பதற்கான உத்தரவு வழங்க வேண்டும். நீா்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

அதற்கு கலெக்டர் அனிஷ்சேகர் பதிலளித்து பேசினார். அப்போது விவசாய மின் இணைப்பு முறைகேடு இன்றி வழங்கப்படும். ஏர்குடி அச்சம்பத்து ஊராட்சியில் இருந்து கழிவுகளை நிலையூா் கால்வாயில் விடாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் நீா்நிலைகளில் 650 ஹெக்டோ் அளவுக்கு ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டன. அதில் 450 ஹெக்டோ் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டிருக்கின்றன. எஞ்சியுள்ள ஆக்கிரமிப்புகளும் விரைவில் அகற்றப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்