< Back
மாநில செய்திகள்
வாழைத்தார்களுக்கு வாட்டர் சர்வீஸ்
கரூர்
மாநில செய்திகள்

வாழைத்தார்களுக்கு 'வாட்டர் சர்வீஸ்'

தினத்தந்தி
|
29 Aug 2023 6:45 PM GMT

பூச்சி தாக்குதல் காரணமாக வாழைத்தார்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்து வியாபரிகள் புதிய உத்தியை கடைபிடித்துள்ளனர்

வாழைத்தார்கள்

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, குளத்துப்பாளையம், முத்தனூர், கோம்புப்பாளையம், பேச்சிப்பாறை, நடையனூர், திருக்காடுதுறை, நத்தமேட்டுப்பாளையம், தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர், பாலத்துறை, தளவாபாளையம், கடம்பங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பூவன், பச்சநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிரிட்டுள்ளனர். தற்போது வாழைத்தார்களை வெட்டி அறுவடை செய்து வருகின்றனர். இவை, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்கப்படுகிறது. இங்கு வாங்கப்படும் வாழைத்தார்கள், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

வாட்டர் சர்வீஸ்

இந்த நிலையில் தற்போது வாழைத்தார்கள் கள்ளிப்பூச்சி தாக்குதலால் அதன் காம்பை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளை நிறத்தில் படர்ந்திருக்கிறது. மேலும் அதைத் தொட்டால் பிசுபிசுப்பாக இருப்பதால் அதை வாடிக்கையாளர்கள் வாங்க விரும்புவதில்லை. இதனால் வாழைத்தார்களை வாங்கிய வியாபாரிகள், வெளி ஊர்களுக்கு அனுப்புவதற்கு முன்பாக தண்ணீரை வேகமாக பீய்ச்சியடித்து, கள்ளிப்பூச்சிகளை அகற்றுகின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது:- வாழைத்தார்கள் முற்றி வெட்டும் நிலையில் உள்ள பருவ காலத்தில் வெள்ளை நிறத்தில் கள்ளிப்பூச்சி நோயால் வாழைத்தார்கள் பாதிக்கப்படுகிறது. வெளியூர்களுக்கு அனுப்புவதற்கு முன்பாக சுத்தமாக கள்ளிப்பூச்சியை அகற்ற வாழைத்தார்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்து அனுப்புகிறோம். இந்த நேரத்தில் கள்ளிப்பூச்சி அகற்ற மருந்து அடித்தால் அந்த வாழைப்பழங்களை சாப்பிடுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு வாழைத்தார்களுக்கு மருந்து அடிக்காமல், வாட்டர் சர்வீஸ் செய்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். இதற்கு வாட்டர் சர்வீஸ் செய்ய ஒரு வாழைத்தாருக்கு 10 ரூபாய் எங்களுக்கு செலவாகின்றது. இதனால் எங்களை போன்ற வியாபாரிகள் மிகுந்த கவலையில் உள்ளோம் என்றனர்.

மேலும் செய்திகள்