திண்டுக்கல்
மருதாநதி அணையில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
|மதுரை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ரவி மற்றும் அதிகாரிகள் நேற்று மருதாநதி அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 74 அடியாகும். தாண்டிக்குடி, பண்ணைகாடு, பாச்சலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யும்போது அணைக்கு நீர்வரத்து ஏற்படும். இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து அதன் முழு கொள்ளளவை எட்டியது.
அணைக்கு வினாடிக்கு 65 கனஅடி நீர்வரத்து உள்ளது. இந்த நிலையில் மதுரை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ரவி மற்றும் அதிகாரிகள் நேற்று மருதாநதி அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணையில் உள்ள ஷட்டர்கள், தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள், அணையின் உறுதித்தன்மை, கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடும் பகுதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து நீர்வளத்துறையினரிடம் கேட்டபோது, மழைக்காலம் தொடங்கியுள்ளதால் அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ததாக தெரிவித்தனர். ஆய்வின்போது பெரியகுளம் மஞ்சளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சுகுமார், மருதாநதி அணை வடிகால் உபகோட்ட செயற்பொறியாளர் செல்வம், பொறியாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.