கன்னியாகுமரி
பேச்சிப்பாறை அணையில் இருந்து ஜூன் 1-ந் தேதி தண்ணீர் திறப்புவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
|குமரி மாவட்டத்தில் பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து ஜூன் 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து ஜூன் 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் நடந்த கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
ஜூன் 2-ந் தேதி நல்ல நாளாக இருப்பதால் பேச்சிப்பாறை அணையில் இருந்து அன்றைய தினம் தண்ணீர் திறக்க வேண்டும். அணையை திறப்பதற்கு முன்பு கால்வாய்களை தூர்வார வேண்டும். குமரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் விளை நிலங்கள் மனையாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. எனவே விளை நிலங்களில் மனை அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோடைக்காலமான தற்போது தண்ணீரை தேடி வன விலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வன பகுதியில் நீர் தொட்டி அமைக்க வேண்டும். கணபதிபுரம் பகுதியில் 3 ஐஸ் கம்பெனிகள் அனுமதி இன்றி கட்டப்பட்டு வருகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். குமரி மாவட்டத்தில் 46 நீரினை பயன்படுத்துவோர் சங்கம் உள்ளது. அதில் உள்ள வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அதை நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
1-ந் தேதி தண்ணீர் திறப்பு
இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் பதிலளித்து கூறியதாவது:-
பேச்சிப்பாறை அணையில் இருந்து ஜூன் 1-ந் தேதி தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதி வேளாண்மை பகுதி என தரம் பிரிக்கப்பட்டு உள்ளது. குடியிருப்பு பகுதியில் தான் வீடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரு சில நஞ்சை பகுதியை குடியிருப்பு பகுதி என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. நஞ்சை நிலங்களை குடியிருப்பு பகுதியாக மாற்றியது தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்க கூட்டம் நடத்தப்படும்.
கோடை காலத்தில் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகாமல் இருக்கும் வகையில் ஏற்கனவே 6 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. ரோஸ்மியாபுரம், தடிக்காரன்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தடுப்பணைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுமதியின்றி ஐஸ் கம்பெனிகள்
குமரி மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. பழையாற்றில் சபரி அணை முதல் பறக்கின்கால் வரை 488 இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. பட்டணம் கால்வாய், கோதையாறு இடது கரை கால்வாய், அனந்தனார் கால்வாய்களில் பக்கசுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
நீரினை பயன்படுத்துவோர் சங்க வாக்காளர் பட்டியலில் இறந்தவர் பெயர் இருந்தால் இறப்பு சான்றிதழை கொடுத்து அவரது பெயரை நீக்கிக் கொள்ளலாம். கணபதிபுரம் பகுதியில் அனுமதி இன்றி ஐஸ் கம்பெனிகள் செயல்பட்டால் அதை உடனடியாக மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
கூட்டத்தில் இணை இயக்குனர் (வேளாண்மை) ஹனிஜாய் சுஜாதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜாண், கலெக்டாின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கீதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜா, வேளாண் விற்பனை குழு செயலாளர் விஷ்ணப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சந்திரசேகரன், நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் வின்ஸ் ஆன்றோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.