< Back
மாநில செய்திகள்
டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
மாநில செய்திகள்

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

தினத்தந்தி
|
30 July 2024 1:18 PM IST

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.

தஞ்சை,

காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் மாலை தண்ணீர் திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய உரிமை தண்ணீர் கிடைக்கவில்லை என்றாலும், இயற்கையின் கொடையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து தண்ணீர் பெருகி உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையை நிரம்ப வைக்கிறது.

நேற்று முன்தினம் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீர்திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. நேற்று மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு நாளை(புதன்கிழமை) அதிகாலை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து கல்லணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்கு நாளை காலை 9.15 மணியளவில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று நீர்வள ஆதாரதுறையினர் தெரிவித்துள்ளனர். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் காவிரி டெல்டா மாவட்ட அமைச்சர்கள், டெல்டா மாவட்ட கலெக்டர்கள், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், வேளாண்மை துறை அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொள்கின்றனர். கல்லணையில் தண்ணீர் திறக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை நீர்வள ஆதார துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்