சேலம்
மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
|குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
மேட்டூர்:
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
காவிரி டெல்டா மாவட்டங்கள்
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, நாகை ஆகிய 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த தண்ணீர் திறப்பு அணையில் இருக்கும் நீரை பொறுத்து குறித்த நாளில் அல்லது அதற்கு முன்பாகவோ, அதன் பின்பாகவோ திறந்து வைக்கப்படுகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீரின் மூலம் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி ஆகிய சாகுபடியில் ஈடுபடுகிறார்கள். முதலில் திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபடுவார்கள்.
நாளை திறப்பு
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதன்படி நேற்று முன்தினம் 115.91 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று மாலை 116.88 அடியாக உயர்ந்தது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரத்து 338 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 25 ஆயிரத்து 161 கனஅடியாகவும், மாலையில் வினாடிக்கு 13 ஆயிரத்து 74 கனஅடியாகவும் குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பும் தருவாயில் உள்ளதால், குறுவை சாகுபடிக்காக முன்னதாகவே தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இன்று வருகிறார்
இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையம் வருகிறார். அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர் அவர் இரவு மேட்டூரில் தங்குகிறார். நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்கான ஆயுத்த பணிகளை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மேட்டூர் அணைக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அணையின் நீர் இருப்பு, வெளியேற்றம் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆலோசனை
மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது அமைச்சருடன் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், பொதுப்பணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சதாசிவம் எம்.எல்.ஏ., மேட்டூர் நகராட்சி தலைவர் சந்திரா, துணைத்தலைவர் காசி விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கோபால், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மிதுன் சக்கரவர்த்தி, ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.