கிருஷ்ணகிரி
பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
|ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.
தண்ணீர் திறப்பு
ஊத்தங்கரை தாலுகா பாம்பாறு அணையில் இருந்து, பாசனத்திற்காக தண்ணீர் நேற்று திறந்து வைக்கப்பட்டது. கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான வந்தனா கார்க் அணையில் இருந்து மதகு வழியாக தண்ணீரை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
பாம்பாறு அணை 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. பாம்பாறு அணையின் முழு நீர் மட்ட உயரம் 19.68 அடி. இதன் முழு கொள்ளளவு 280 மி.க. அடி ஆகும். பாம்பாறு அணையில் இருந்து 2022-2023-ம் ஆண்டு ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஊத்தங்கரை தாலுகாவில் உள்ள மிட்டப்பள்ளி, ஓபகாவலசை, போத்தராஜன்பட்டி, மூன்றம்பட்டி, கொட்டுகாரம்பட்டி, கரியபெருமாள்வலசை, புளியம்பட்டி, எட்டிப்பட்டி, பாவக்கல், நல்லவம்பட்டி, நடுப்பட்டி, குப்பநத்தம் ஆகிய 12 கிராமங்களைச் சேர்ந்த 2,501 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
4 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்
அதேபோல தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகாவில் உள்ள தா.அம்மாப்பேட்டை, வேடக்கட்டமடுவு, மேல்செங்கப்பாடி மற்றும் ஆண்டியூர் ஆகிய கிராமங்களிலுள்ள 1,499 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மொத்தம் 16 கிராமங்களிலுள்ள 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே, விவசாயிகள் பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன், பொறியாளர் ஜெயக்குமார், தாசில்தார் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்குமரன், சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சின்னத்தாய் கமலநாதன், சத்தியவானிராஜா, கோவிந்தன், பூபாலன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஷ், மீனவர் சங்க பிரதிநிதி ரத்தினம் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.