கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
|கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீரை அமைச்சர்கள் காந்தி, மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்து மலர் தூவினர்.
தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாகுபடிக்கு தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டார். அதன்படி, நேற்று காலை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். செல்லக்குமார் எம்.பி., ஓசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினர். பின்னர் அமைச்சர்கள் கூறியதாவது:-
9,012 ஏக்கர் பாசன வசதி
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து தற்போது உள்ள தண்ணீர் அளவை கொண்டும், நீர்வரத்தை எதிர்நோக்கியும், வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 87 கனஅடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 93 கனஅடி வீதமும் மொத்தம் 180 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறும்.
இன்று (நேற்று) முதல் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். எனவே, விவசாயிகள் தண்ணீரை சிக்கனமான பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும். நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வள ஆதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினர்.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், உதவி கலெக்டர் சதீஸ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், நகர்மன்ற துணைத்தலைவர் சாவித்திரி, நிர்வாகிகள் அஸ்லாம், கவுரப்பன், சக்திவேல், கடலரசுமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் அக.கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ஜேசுதுரை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாசன விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.