< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.95 லட்சம் கன அடியாக நீடிப்பு
சேலம்
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.95 லட்சம் கன அடியாக நீடிப்பு

தினத்தந்தி
|
17 Oct 2022 7:20 PM GMT

ேமட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து நேற்று 2-வது நாளாக வினாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கனஅடியாக நீடித்தது.

மேட்டூர்:-

ேமட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து நேற்று 2-வது நாளாக வினாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கனஅடியாக நீடித்தது.

பரவலாக மழை

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது.

இதன் காரணமாக கடந்த 12-ந் தேதி காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டி இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்ேட போனது.

2-வது நாளாக நீடிப்பு

இதன்படி நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தானது நேற்று 2-வது நாளாக அதே அளவில் நீடித்தது. அணை நிரம்பியுள்ள நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையை ஒட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி வீதமும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 1 லட்சத்து 73 ஆயிரத்து 500 கன அடி வீதமும், கால்வாய் பாசன தேவைக்கு வினாடிக்கு 200 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக காவிரி கரையோரம் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.

மேலும் மேட்டூர் அனல்மின்நிலையம் அருகே காவிரி ஆற்றை கடந்து எடப்பாடி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூர்-எடப்பாடி நெடுஞ்சாலையில் நேற்று 2-வது நாளாக போக்குவரத்து தடை நீடிக்கிறது.

மேலும் செய்திகள்