மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 1.25 லட்சம் கன அடியாக நீடிப்பு
|மேட்டூர் அணையில் கடந்த மூன்று நாட்களாக நீர்வரத்து 1.25 லட்சம் கன அடியாக நீடித்து வருகிறது.
சேலம்,
கர்நாடக மாநிலத்தில் மழை மீண்டும் தீவிரமடைந்ததால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேட்டூர் அணையின் நீர்வரத்து 80 ஆயிரம் கன அடியில் இருந்து 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. அணையின் பாதுகாப்பை கருதி இந்த 1.25 லட்சம் கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக அணையை ஒட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதமும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 1,02,000 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மூன்றாவது நாளாக 1.25 லட்சம் கன அடியாக நீடித்து வருகிறது. அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுவதால், காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.