திருவள்ளூர்
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து 1,030 கனஅடியாக அதிகரிப்பு
|கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து 1,030 கனஅடியாக அதிகரித்துள்ளது.
சென்னை நகர் மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி விளங்குகிறது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், ஜமீன் கொரட்டூர் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி கடந்த மே 1-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 3-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. அப்போதிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை வினாடிக்கு 890 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது.
நேற்று காலை முதல் நீர்வரத்து அதிகமாகியது. மழை நீர் வினாடிக்கு 650 கனஅடியாகவும், கிருஷ்ணா நீர் வினாடிக்கு 380 கனஅடியாகவும் மொத்தம் வினாடிக்கு 1.030 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும்
இதில் 3.231 டி.எம்.சி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று மாலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 33.22 அடியாக பதிவாகியது. 2.586 டி எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 380 கன அடி, சென்னை குடிநீர் வாரியத்திற்கு பேபி கால்வாய் வழியாக 40 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.