ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
|ஐவர்பாணி, மெயின் அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஒகேனக்கல்,
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது. இதனால் ஐவர்பாணி, மெயின் அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர். தொங்கு பாலத்தில் நின்றவாறு பாறைகளுக்கு இடையே தண்ணீர் விழும் காட்சியை கண்டு களித்தனர்.
மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்தும் மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் மீன்சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். மீன் வியாபாரம் விற்பனை களைகட்டியது. தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.