மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு - 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
|மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததையடுத்து 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம்,
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேட்டூர் அணையின் நீர்மட்டமானது முழுகொள்ளளவான 120 அடியை எட்டி கடந்த சில நாட்களாகவே தண்ணீரானது அதிகளவில் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது காவிரி கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மேட்டூர் அணையின் உதவி செயற்பொறியாளர் அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 40 ஆயிரம் கனஅடியிலிருந்து 50 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து அணை மற்றும் சுரங்க மின்நிலையம் வழியாக 23 ஆயிரம் கனஅடி வீதமும் உபரிநீர் போக்கி வழியாக 27 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தண்ணீரின் அளவு எந்த நேரமும் அதிகரிக்கலாம். எனவே, காவிரி கரையோரம் உள்ள மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளுமாறு சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு மேட்டூர் அணையின் உதவி செயற்பொறியாளர் அறிக்கை மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.