கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை பகுதி வனப்பகுதியில்தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
|தேன்கனிக்கோட்டை:
ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், ராயக்கோட்டை, அஞ்செட்டி, கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, தளி, உரிகம், ஜவளகிரி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பறவை இனங்கள் உள்ளிட்ட வன உயிரினங்கள் வாழ்கின்றன.
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் வனப்பகுதியில் வாழும் வன விலங்குகள் மற்றும் பறவை இனங்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீரை நிரப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடை காலம் தொடங்கி உள்ளதை தொடர்ந்து வனத்துறையினர் இந்த பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் வாழும் வன உயிரினங்கள் குடிநீர் தொட்டிகளில் நிரப்பப்பட்டுள்ள தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்து வருகிறது. வனத்துறையினரின் செயலுக்கு விலங்கின ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
யானை, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் மற்றும் பறவைகள் தண்ணீர் தொட்டிகளின் தாகத்தை தீர்த்து கொள்ளும் புகைப்படங்கள் வனத்துறையினர் அப்பகுதியில் வைத்துள்ள கேமராவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.