விருதுநகர்
நீர் நிரம்பி இருந்தும் பயன்படுத்தப்படாத நிலை
|ஒண்டிப்புலி கல்குவாரியில் நீர் நிரம்பி இருந்தும் பயன்படுத்தப்படாத நிலை உள்ளது குறித்து விருதுநகர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒண்டிப்புலி கல்குவாரியில் நீர் நிரம்பி இருந்தும் பயன்படுத்தப்படாத நிலை உள்ளது குறித்து விருதுநகர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடிநீர் ஆதாரம்
விருதுநகர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நிலத்தடி நீர் ஆதாரங்களான ஆனைக்குட்டம் அணைப்பகுதி, காருசேரி கல்குவாரி, சுக்கிரவார்பட்டி கோடைகால குடிநீர் தேக்கம், ஒண்டிப்புலி கல்குவாரி ஆகியவை பயன்பாட்டில் இருந்து வந்தது.
இதன் பின்னர் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் நிலத்தடி நீர் ஆதாரங்களிலிருந்து குடிநீர் எடுப்பதில் போதிய கவனம் செலுத்தாத நிலையில் விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழி சாலை திட்ட பணியின் போது ஒண்டிப்புலியில் இருந்து குடிநீர் கொண்டுவரும் குழாய்கள் சேதமடைந்ததால் ஒண்டிப்புலி கல்குவாரியில் இருந்து குடிநீர் எடுக்கும் பணி பாதித்தது.
ஒண்டிப்புலி கல்குவாரி
கடந்த 1989-ம் ஆண்டு ஒண்டிப்புலி கல்குவாரி தனியார் நிறுவனத்தால் விருதுநகர் நகராட்சி பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இந்த குவாரியிலிருந்து தினசரி 10 லட்சம் முதல் 12 லட்சம்லிட்டர் குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் நான்கு வழிச்சாலை திட்டப்பணியின்போது குழாய்கள் சேதமடைந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு கலெக்டராக இருந்த சி.ஜி. தாமஸ் வைத்தியன் ஏற்பாட்டின் பேரில் முன்னாள் நகர சபை துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி கூறிய ஆலோசனைப்படி விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் தமிழ்நாடு ஓட்டலுக்கு எதிர்ப்புறம் தரைமட்ட குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது.
அதன் பின்னரும் நகராட்சி நிர்வாகம் ஒண்டிப்புலி கல்குவாரி தண்ணீரை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்காத நிலை நீடிக்கிறது.
நடவடிக்கை
எனவே தற்போதைய நிலையில் கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க விருதுநகர் நகராட்சி நிர்வாகம் ஒண்டிப்புலி குவாரி குடிநீரை கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கூடுதல் குடிநீர் கிடைக்க வாய்ப்பு உள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.