< Back
மாநில செய்திகள்
மார்க்கெட்டில் தண்ணீர் புகுந்தது
விருதுநகர்
மாநில செய்திகள்

மார்க்கெட்டில் தண்ணீர் புகுந்தது

தினத்தந்தி
|
2 Nov 2022 12:54 AM IST

ராஜபாளையத்தில் பெய்த மழையினால் மார்க்கெட்டில் தண்ணீர் புகுந்தது.

ராஜபாளையம்

ராஜபாளையத்தில் பெய்த மழையினால் மார்க்கெட்டில் தண்ணீர் புகுந்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

ராஜபாளையத்தில் கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மலையடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் தற்போது தண்ணீர் வர தொடங்கி உள்ளது. இதனால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மூலம் நகராட்சிக்கு சொந்தமான 2 குடிநீர் தேக்கங்களுக்கும் வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. முடங்கியாற்றில் நீர் நிறைந்து செல்வதால், கண்மாய்களுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. குடிநீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொது மக்களும், கண்மாய்களுக்கு நீர் வந்து கொண்டிருப்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பலத்த மழை

இந்தநிலையில் நேற்று இரவு ராஜபாளையம் நகர் பகுதியில் பெய்த கன மழை காரணமாக தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.

பஞ்சு மார்க்கெட், காந்தி சிலை ரவுண்டானா, பழைய பஸ் நிலையம் முன்பு பிரதான சாலையோரம் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். சந்தை மார்க்கெட் பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதிப்பட்டனர். நகரில் உள்ள வாருகால் அடைப்பு ஏற்பட்டதால் கடைகளுக்குள் மழை நீர் புகுந்தது. அதேபோல தளவாய்புரம், சத்திரப்பட்டி, முகவூர், சேத்தூர், தேவதானம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

வத்திராயிருப்பு

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மாலை 6.45 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் பலத்த மழையாக மாறியது. 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையினால் வத்திராயிருப்பில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. திடீரென பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்