திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் வறண்டு வரும் நீர்நிலைகள்
|திருவாரூர் மாவட்டத்தில் வறண்டு வரும் நீர்நிலைகள்
சுட்டெரிக்கும் வெயிலால் திருவாரூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.
வறண்டு வரும் நீர்நிலைகள்
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வருகிறது. 100 டிகிரியை நெருங்கும் அளவுக்கு தினந்தோறும் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் உச்சி வெயில் நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர்.
இந்த வெயிலின் தாக்கத்தால் ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வறண்டு வருகிறது. பொதுவாக ஜனவரி மாதத்தில் மேட்டூர் அணை மூடப்படும். அப்போதெல்லாம் ஏப்ரல், மே மாதங்களில் ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் மெல்ல மெல்ல குறைந்து ஆடு- மாடுகள் தண்ணீர் குடிக்கும் அளவிற்கும், சில இடங்களில் மனிதர்கள் குளிக்கும் அளவுக்கும் தண்ணீர் இருக்கும்.
குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம்
ஆற்றுப்படுகைகளில் மீண்டும் தண்ணீர் வரும் வரை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக மேட்டூர் அணை மூடப்பட்டாலும் ஆறு, குளம், குட்டைகளின் நீர் இருப்பு வெகுவாக குறைந்துள்ளது. அதிகரித்து வரும் வெப்பத்தால் இந்த நீர்நிலைகளில் தேங்கி இருந்த தண்ணீர் விரைவாக வறண்டு வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் முற்றிலுமாக தண்ணீர் வறண்டு விடும் நிலை உள்ளது. இவ்வாறு தண்ணீர் வறண்டு போனால் கால்நடைகள் குடிப்பதற்கும், அதனை குளிப்பாட்டுவதற்கும் தண்ணீர் இல்லாமல் போகும். இதனால் கால்நடைகளுக்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். கூடுதல் வெப்பத்தால் தரைப்பகுதிகளிலும் வெப்பம் அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.
குளம், குட்டைகளை நிரப்ப வேண்டும்
இந்த வருடம் மேட்டூர் அணை திறந்து கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேர்வதற்கு இன்னும் 60 நாட்களுக்கு மேலாகும். அதுவரை குடிநீர் தேவையை சமாளிப்பது சிரமம். எனவே இதனை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், கால்நடைகளின் குடிநீர் தேவையை ஈடு செய்யும் வகையில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறந்து, தண்ணீர் வீணாகாமல் கண்காணித்து குளம், குட்டைகளை தண்ணீரால் நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.