< Back
மாநில செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரியில் 6 துண்டுகளாக வீசப்பட்ட காவலாளி; கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த கொடூர கொலை - பரபரப்பு தகவல்
மாநில செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியில் 6 துண்டுகளாக வீசப்பட்ட காவலாளி; கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த கொடூர கொலை - பரபரப்பு தகவல்

தினத்தந்தி
|
3 Feb 2024 11:30 AM IST

பூமிநாதனை துப்பாக்கியால் சுட்டு உடலை மறைக்க தலை, கை, கால்களை வெட்டி கல்லால் கட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் வீசியுள்ளார்.

சென்னை,

சென்னை குன்றத்தூர் அருகே உள்ள சிறுகளத்தூர் பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரியில் தலை, கை, கால்கள் இல்லாத உடல் பிளாஸ்டிக் பையில் கல்லால் கட்டி வீசப்பட்டு இருப்பதாக அங்குள்ள மக்கள் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கை, கால்கள் இல்லாத 6 துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துண்டிக்கப்பட்ட அவரது தலை மற்றும் உடல் பாகங்களை போலீசார் தேடி வந்தனர்.

இதையடுத்து, ஏரிக்கரையின் அருகிலேயே துண்டிக்கப்பட்ட அவரது 2 கால்களும் கிடைத்தன. இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பின்பு, கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் கடலூரை சேர்ந்த பூமிநாதன் (வயது 38) என்பதும் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. கடந்த சில நாட்களாக குடும்பத்தினர் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் வேலை செய்யும் இடத்தில் அவரது குடும்பத்தினர் வந்து பார்த்தபோதுதான் அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கணவரை காணவில்லை என அவரது மனைவி புகார் அளித்த நிலையில் தற்போது குன்றத்தூரில் மீட்கப்பட்ட உடலில் இருந்த உடைகளை காண்பித்தபோது அது மாயமான தனது கணவர் பூமிநாதன் அணிந்திருந்த உடை என்பதை அவரது மனைவி உறுதி செய்தார். இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது,

கடலூரை சேர்ந்த பூமிநாதன் திருமணம் ஆன நிலையில் வீட்டில் தகராறு செய்து விட்டு சென்னையில் தங்கி, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது அங்கு பணி புரியும் மற்றொரு பெண் காவலாளி நாகலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும், நாகலட்சுமிக்கு சிறுகளத்தூர் பகுதியை சேர்ந்த பிலிப்ஸ் (வயது 30) என்பவருடனும் பழக்கம் ஏற்பட்டது. நாகலட்சுமியுடன் பூமிநாதன் பழகியது பிலிப்சுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தனது நண்பர் வினோத் (வயது 32) என்பவருடன் சேர்ந்து பூமிநாதனை நைசாக பேசி அழைத்து சென்று நாகலட்சுமியுடன் பழக கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் பூமிநாதனை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதாகவும், அதில் பூமிநாதன் இறந்து போன நிலையில் அவரது உடலை மறைப்பதற்கு தலை, கை, கால்கள் போன்றவற்றை வெட்டி கல்லால் கட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் வீசி விட்டு பின்னர் தலையை மட்டும் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வண்டலூர் பகுதியில் உள்ள ஏரியில் வீசியதும் தெரியவந்தது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

தற்போது பூமிநாதன் தலையை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் முதற்கட்டமாக வினோத் மற்றும் பிலிப்ஸ் ஆகியோரை கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்