< Back
மாநில செய்திகள்
வாலிபர் மர்மச்சாவு கொலையா? போலீசார் விசாரணை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

வாலிபர் மர்மச்சாவு கொலையா? போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
28 July 2022 12:20 PM IST

திருவள்ளூரை சேர்ந்த வாலிபர் ஸ்ரீபெரும்புதூரில் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 35) இவருக்கு ஞானம் என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் ஸ்ரீபெரும்புதூர் மகாத்மா காந்தி தெருவில் தங்கி சகோதரி நடத்தும் காய்கறி கடையில் வேலை செய்து வந்தார். இவர் தினந்தோறும் அதிகாலை 3 மணிக்கு கோயம்பேடு சந்தைக்கு சென்று காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல அதிகாலை 3 மணிக்கு அவரது சகோதரி போன் செய்தும் எடுக்காத நிலையில் நேரில் சென்று பார்த்தார்.

அப்போது ஏசுதாஸ் தான் தங்கியிருந்த குடியிருப்பில் வீட்டின் வெளியில் மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏசுதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் ஏசுதாசுக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், அவர்கள் இருவருக்கும் இடையே சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 3-வது மாடியில் தங்கி இருந்த ஏசுதாஸ் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாரா? அல்லது யாரேனும் அவரை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தனரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்