< Back
மாநில செய்திகள்
கல்குவாரிக்கு விதிகளை பின்பற்றி அனுமதி வழங்கப்பட்டதா?
மதுரை
மாநில செய்திகள்

கல்குவாரிக்கு விதிகளை பின்பற்றி அனுமதி வழங்கப்பட்டதா?

தினத்தந்தி
|
19 March 2023 1:46 AM IST

கல்குவாரிக்கு விதிகளை பின்பற்றி அனுமதி வழங்கப்பட்டதா? என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா, புலியூரைச் சேர்ந்த நீதிராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் கிராமத்தில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள்தான். இங்கு உள்ள கண்மாய்தான், விவசாயம் மற்றும் குடிநீருக்கு ஆதாரமாக விளங்குகிறது. இந்த கண்மாயின் அருகில் தனி நபர் ஒருவர் கல்குவாரி நடத்துவதற்கு 5 ஆண்டுகளுக்கு அனுமதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இந்த குவாரிக்கு செல்வதற்கு என தனி வழி கிடையாது. இதனால் கண்மாய் பாதையை ஆக்கிரமித்து, அந்த பாதையை குவாரியினர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த கல்குவாரிக்கு அருகிலேயே ரெயில்வே கேட் அமைந்து உள்ளது. நாள்தோறும் பல்வேறு வாகனங்கள் டன் கணக்கில் கற்களை ஏற்றிக்கொண்டு ஊருக்குள் தொடர்ச்சியாக செல்கின்றன. இதனால் கிராம மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் கிராம மக்கள் ஏராளமான பாதிப்புகளை சந்திப்பார்கள். இந்த கல்குவாரிக்கு அனுமதி அளிப்பதற்கு முன்பாக இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை ஆய்வு செய்யாமல் அதிகாரிகள் செயல்பட்டு உள்ளனர்.

எனவே புலியூர் கிராம மக்களின் நலன் கருதி, இந்த கல்குவாரிக்கு அளித்த அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, அந்த பகுதி வரைபடத்துடன் கூடிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்