ராமநாதபுரம்
மோட்டார் வாகன சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
|மோட்டார் வாகன சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரித்துள்ளார்.
ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக்முகமது கூறியதாவது:- மோட்டார் வாகன சட்டத்தின்படிதான் இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும். ஏனெனில் அதற்கேற்பதான் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாறாக இருசக்கர வாகனங்களில் சைலன்சர் மற்றும் கைப்பிடி எனப்படும் ஹேண்டில் பார்களில் தாங்களாகவே மாற்றம் செய்து ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும். இதன்படி இருசக்கர வாகனங்களில் ைசலன்சர்களை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதிக ஒலியுடனோ, விசித்திரமான ஒலிகளுடனோ மாற்றம் செய்து அதிக ஒலி மாசு ஏற்படும் வகையில் இயக்கினால் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதேபோல, மோட்டார் சைக்கிளில் ஹேண்டில் பார்களில் அவரவர் தேவைக்கேற்ப மாற்றம் செய்து வடிமைத்து இயக்கினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகனங்களில் மக்களை திசைதிருப்பும் வகையில் சிலர் அதிக மாசு ஏற்படுத்தும் வகையில் ஒலி ஏற்படுத்தும் ஏர்ஹாரன்களை இயக்குவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் ஏர்ஹாரன் பொருத்தி வாகனங்களை இயக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதுதவிர, காரில் முன் இருக்கைகள் மற்றும் பின் இருக்கைகளில் பயணம் செய்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணியவேண்டும். சீட்பெல்ட் அணிய தவறினால் ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதுதொடர்பாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் காவல்துறையுடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தப்பட்டு மோட்டார் வாகன சட்ட விதிகள் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.