ராமநாதபுரம்
பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை
|பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.
கமுதி,
2023-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறப்பதையொட்டி கமுதி பகுதிகளில் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கமுதி பாலாஜி, அபிராமம் அபுதுல்லா, அனைத்து மகளிர் அணி போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா மற்றும் போலீசார் கமுதி, அபிராமம், மண்டலமாணிக்கம், பெருநாழி, கோவிலாங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகனங்களில் அதி வேகமாக வந்தவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பினார்கள்.
இதுகுறித்து கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் கூறியதாவது, புத்தாண்டையொட்டி கமுதி பகுதியில் பதற்றமான பகுதிகளில் போலீசார் அதிக அளவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இது தவிர வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பொதுமக்களுக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தினால் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் புத்தாண்டு கொண்டாடும் இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டி சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.