< Back
மாநில செய்திகள்
தண்டவாளங்களில் நின்று செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கைரயில் பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
தர்மபுரி
மாநில செய்திகள்

தண்டவாளங்களில் நின்று செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கைரயில் பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கை

தினத்தந்தி
|
5 July 2023 1:00 AM IST

தர்மபுரி:

தண்டவாளங்களில் நின்று ரெயில் வரும்போது செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயணிகளுக்கு ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

வாலிபர்கள் உயிரிழப்பு

திருப்பூர் அருகே தண்டவாளத்தில் நின்று ரெயில் வரும் போது செல்பி எடுக்க முயன்ற 2 வாலிபர்கள் ரெயில் மோதி பலியானார்கள். இதே போல் சேலம் அருகே ஏத்தாப்பூர் பகுதியில் தண்டவாளத்தில் நின்று கொண்டு செல்பி எடுக்க முயன்ற ஒரு வாலிபர் ரெயில் மோதி உயிரிழந்தார். இந்த நிலையில் ரெயில் தண்டவாளங்களில் நின்று கொண்டு செல்பி எடுக்க கூடாது என்று ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ரெயில்வே போலீசாருக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து தர்மபுரி ரெயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செல்பி எடுக்கக் கூடாது

நிகழ்ச்சியில் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் ரெயில்வே போலீசார், பிளாட்பாரங்களில் ரெயில்களுக்காக காத்திருந்த பயணிகளை சந்தித்து ரெயில் தண்டவாளங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கி கூறினார்கள்.

அப்போது ரெயில் நிலையங்களில் ரெயில்கள் வரும்போது பிளாட்பாரத்தை ஒட்டி நிற்பதை பயணிகள் தவிர்க்க வேண்டும். இதேபோல் ரெயில்கள் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் இறங்கி நிற்பது, தண்டவாளங்களை கடக்க முயற்சி செய்வது ஆகியவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும். இதேபோல் செல்பி மோகம் காரணமாக ரெயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் நின்று கொண்டு செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

இத்தகைய அபாயகர செயலில் ஈடுபடுபவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்க கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு இத்தகைய விபரீத செயல்களில் ஈடுபடுவதை ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும் என்று அப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தண்டவாளத்தில் நின்று கொண்டு செல்பி எடுக்க முயல்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.1000 அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதிக்க வாய்ப்புள்ளது என்று அப்போது போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்