சேலம்
ஆத்தூர் அருகே பள்ளி மாணவனை தாக்கிய வார்டனுக்கு 3 ஆண்டுகள் சிறை
|ஆத்தூர் அருகே பள்ளி மாணவனை தாக்கிய வார்டனுக்கு 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது.
ஆத்தூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்தவர் தர்மன். இவருடைய மகன் கோவிந்தராஜ் (வயது 14). இவன் ஆத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி அன்று பள்ளி விடுதியில் தங்கி இருந்த மாணவர் கோவிந்தராஜை, விடுதி வார்டனான நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி மூங்கில் தடியால் தாக்கி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஆத்தூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட, விடுதி வார்டன் பாக்கியராஜிக்கு 3 ஆண்டுகளும், 3 மாதமும் சிறை தண்டனை விதித்தும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி அருண்குமார் தீர்ப்பு கூறினார்.