வக்பு வாரிய சட்டத் திருத்தம்: எடப்பாடி பழனிசாமியின் புகாருக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு
|வக்பு வாரிய சட்டத் திருத்தம் தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் புகாருக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை,
வக்பு வாரிய சட்டத் திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்திற்கு பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறான செய்தியை தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்று (30.09.2024) எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட செய்தியில், மத்திய அரசு உத்தேசித்துள்ள வக்பு வாரிய சட்டத் திருத்தம் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டத்திற்கு பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்காத அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக, உண்மைக்கு புறம்பான செய்திகளை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, வக்பு சட்டத்தினை திருத்துவதற்கு, வக்பு வாரிய சட்டத் திருத்த முன்வரைவினை (The Waqf Amendment Bill. 2024). மாநிலங்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை கலந்து ஆலோசிக்காமல் மக்களவையில், அறிமுகம் செய்தது. இச்சட்ட திருத்த முன்வரைவு நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்விற்கு அனுப்பப்பட்டது (Referred to Joint Parliamentary Committee).
வக்பு திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் (Joint Parliamentary Committee) கருத்துக் கேட்கும் கூட்டம் 30.09.2024 இன்று சென்னையில் நடத்தப்படுவது குறித்து மக்களவை செயலகம் மாநில அரசுக்கு தெரிவித்தது. மத்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சகம் (Ministry of Minority Affairs) இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்தது.
இக்கூட்டத்தில் மாநில அரசு பிரநிதிகள், வக்பு வாரியம், மாநில சிறுபான்மையினர் ஆணையம், இதர சம்பந்தப்பட்ட அமைப்புகள், திருச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் பிரதிநிதிகள். பார் கவுன்சில் பிரதிநிதிகள், வழக்குரைஞர்கள். முத்தவல்லி மற்றும் உலமாக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர். இது தவிர இதர பங்கேற்பாளர்களாக மக்களவை செயலகத்தின் அனுமதி பெற்று விவசாயிகளின் பிரதிநிதிகள், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை குழுவிடம் தெரிவித்தனர்.
சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தது. எனவே எதிர்க்கட்சித் தலைவர். ஒருசில இஸ்லாமிய அமைப்புகளை அழைக்காமல் அரசு புறக்கணித்தது என்று தெரிவித்துள்ளது உண்மைக்கு மாறானது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.