தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ வெளியிட்ட முக்கிய குற்றவாளி பீகார் போலீசில் சரண்
|தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ வெளியிட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி பீகார் போலீசாரிடம் சரண் அடைந்தார்.
வட மாநில தொழிலாளர்கள்
பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணி செய்து வருகின்றனர். பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், அசாம் என பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள அவர்கள் தனியாகவும், குடும்பத்துடனும் வசித்து வருகிறார்கள்.
இந்த தொழிலாளர்கள் மீது, குறிப்பாக பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடப்பதாகவும், இதில் சிலர் கொல்லப்பட்டதாகவும் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இது தொடர்பான போலி வீடியோக்கள் பரவி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
போலி வீடியோக்கள்
இது குறித்து உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார். மேற்படி வீடியோக்களை ஆய்வு செய்து அவற்றை வெளியிட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை தொடங்கினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த சிலர் வேண்டுமென்றே போலி வீடியோக்களை தயாரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது தெரியவந்தது. அந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த தமிழகம் மற்றும் பீகார் மாநில போலீசார், அவர்களை கைது செய்யும் பணிகளை முடுக்கி விட்டனர்.
6 தனிப்படை அமைப்பு
பீகார் மாநில போலீஸ் பொருளாதார குற்றங்கள் தடுப்பு பிரிவினர் இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்திருந்தனர். அமன்குமார், ராகேஷ் திவாரி, யுவராஜ் சிங் ராஜ்புத், மணிஷ் காஷ்யப் உள்ளிட்டோர் மீது இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதில் அமன் குமார் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் பின்னணியில் முக்கிய குற்றவாளியாக இருந்த மணிஷ் காஷ்யப்பை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நேற்று பாட்னா, மேற்கு சாம்பாரான் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
யூடியூப் வலைத்தளம்
இதனால் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து மணிஷ் காஷ்யப் மேற்கு சாம்பாரான் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜக்திஷ்பூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், போலி வீடியோக்களை தயாரித்தவர் மணிஷ் காஷ்யப் என கூறப்படுகிறது. இவர் யூடியூப் வலைத்தளம் ஒன்றையும் நடத்தி வருகிறார். முன்னதாக இவருக்கு சொந்தமான 4 வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியிருந்தனர்.
30 வீடியோக்கள்
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக 30-க்கும் மேற்பட்ட போலி வீடியோக்களை இந்த கும்பல் தயாரித்து இருந்ததாக பீகார் போலீசார் கடந்த வாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி சரண் அடைந்திருப்பது போலீசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.