திருப்பூர்
38 ஊராட்சிகளில் உலக கழிப்பறை தினத்தையொட்டி தூய்மை நடைபயணம்
|உடுமலை ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் உலக கழிப்பறை தினத்தையொட்டி தூய்மை நடைபயணம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடந்தது.
உடுமலை ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் உலக கழிப்பறை தினத்தையொட்டி தூய்மை நடைபயணம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடந்தது.
உலக கழிப்பறை தினம்
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அறிவுரைப்படி உடுமலை ஒன்றியம் போடிபட்டி ஊராட்சி சார்பில் நேற்று உலக கழிப்பறை தினத்தையொட்டி தூய்மை நடைபயணம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தூய்மை நடைபயணம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இருந்து புறப்பட்டது. கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி முன்னிலையில் தொடங்கிய இந்த நடைபயணத்திற்கு போடிபட்டி ஊராட்சி தலைவர் டி.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
இதில் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், அரசு கலைக்கல்லூரி என்.சி.சி. மற்றும் நாட்டுநலத்திட்ட மாணவ-மாணவிகள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நடைபயணம் எலையமுத்தூர் சாலை, தளி சாலை மற்றும் போடிபட்டி ஊராட்சி பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றது.
உறுதிமொழி ஏற்பு
அங்கு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது அவர்கள் எனது கிராமம் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற கிராமமாக திகழ்ந்திட அனைத்து முயற்சிகளையும் செய்வேன். நான் எப்போதும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிப்பேன். தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மட்டுமே தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பேன். பொது இடங்களில் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்யவோ, தீ மூட்டவோ மாட்டேன். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை பயன்படுத்த மாட்டேன். எனது குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் கழிப்பறை பயன்பாடு, திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை மற்றும் நெகிழிப் பொருட்களைத்தவிர்த்தல் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முழுமையாக பங்களிப்பேன், நமது கிராமத்தை எழில்மிகு கிராமமாக மாற்ற உறுதுணையாக இருப்பேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி ஏற்றனர். பின்னர் அரசு கலைக்கல்லூரிக்கு சென்று நடைபயணத்தை நிறைவு செய்தனர்.
ராகல்பாவி, குரல்குட்டை
ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியை ஊராட்சி தலைவர் சுமதிசெழியன் தொடங்கிவைத்தார். இதில் ஊராட்சி உறுப்பினர்கள், தலைமையாசிரியை சாவித்திரி, ஆசிரியர் கு.கண்ணபிரான், பள்ளி மாணவ, மாணவிகள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
குரல்குட்டை ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர்பி.ஆனந்தவேணி பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்டி.தங்கமணி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்க தலைவர்என்.பன்னீர் செல்வம்ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சிவக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
38 ஊராட்சிகள்
இதுபோல் உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி தலைவர் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை உடுமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மு.கந்தசாமி ஆலோசனைப்படி அந்தந்த ஊராட்சி நிர்வாகம் செய்திருந்தது.