திருவாரூர்
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வலங்கைமான் கடைத்தெரு
|போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வலங்கைமான் கடைத்தெரு
வலங்கைமான் கடைத்தெரு போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
போக்குவரத்து ெநரிசல்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் கடைத்தெரு உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இங்கிருந்து மாணவர்கள் கல்லூரி-பள்ளிகளுக்கும், பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக வந்து செல்கின்றனர். மேலும் ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. பொருட்கள் வாங்க வரும் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்வதாலும், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் வருவதாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வலங்கைமான் கடைவீதி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
விதிகளை மீறி செல்லும் வாகனங்கள்
கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் நடுநாராயண வீதி வடக்கு அக்ரஹாரம் வழியாக சென்று வர வேண்டும் என ஒரு வழி பாதை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த ஒருவழி பாதையை பயன்படுத்தாமல் விதிகளை மீறி வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக இந்த கடைவீதியை நீலத்தநல்லூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வரும் லாரிகள் பயன்படுத்தி வருகின்றன. தற்போது வலங்கைமான் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஒருவழிபாதையை மாற்றி அமைத்து எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். ஆனாலும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறி சென்று வருகின்றனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படு்த்த சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து போலீசாரை நியமனம் செய்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். கடைவீதியில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்த இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.